ஆடி மாதத்தில் கல்யாணம் ஆகாத பெண்கள் கல்யாணம் ஆக வேண்டியும், கல்யாணம் ஆன பெண்கள் தன் கணவன் மற்றும் குடும்ப நலன் பற்றி வேண்டியும் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.
இந்தியா என்றாலே விழாக்கள்தான், பண்டிகைகள்தான். அதுவும் நம் தமிழகத்தில் அன்றாடம் ஆன்மீக விழாக்கள்தான். ஆன்மீக விழாக்கள் தமிழ் மாதங்களை அடிப்படையாய் கொண்டது. அதிலும் தமிழ் மாதங்களில் சித்திரை மற்றும் தை மாதங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அது போலத்தான் ஆடி மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. தமிழ் மாதத்தில் 4 – வது மாதமாக வருவது தான் ஆடி மாதம்.
இக்காலத்தில் சூரிய வெப்பம் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலம். சில தமிழ் மாதங்கள் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரை மாதத்தின் பெயராக கூறப்படுகின்றன.
சித்திரை நட்சத்திரம் – சித்திரை மாதம்
விசாக நட்சத்திரம் – வைகாசி மாதம்
ஆஷாட நட்சத்திரம் – ஆஷாட மாதம் – ஆடி மாதம்
இது தக்ஷணாயன கால ஆரம்பம். அதாவது தெய்வங்களுக்கு இரவு நேரம். இந்த கால கட்டத்தில் தெய்வங்களை வழிபடுவதை நம் முன்னோர்கள் சிறப்பு எனக் கூறுகின்றனர். இக்காலம் அதிகம் சக்தி வழிபாட்டிற்கு உரிய காலம் ஆகும். தேவர்களும் இக்காலத்தில் சக்தி உபாசனையிலேயே இருக்கின்றனர்..
ஆடி மாதத்தில்தான் எத்தனை விசேஷங்கள்.
மாதப்பிறப்பினை ஆடிப்பிறப்பு என்று கொண்டாடுகின்றோம். நமது வீட்டு வாசலிலும் மற்றும் பூஜை அறையிலும் அரிசி மாவினால் பெரிய கோலம் இட்டு, காவி மண் பூசி அலங்கரிப்பர். மாவிலை தோரணம் கட்டி வீட்டினை தூய்மை படுத்துவர்.
ஆடி மாதம் பிறந்த உடனேயே கோவிலுக்குச் சென்று வருவர். பலர் மாத தர்ப்பணம் செய்வர். பாயாசம், வடை, போளி என விருந்து சமையல் நடைபெறும். புதிதாய் கல்யாணம் நடந்திருந்தால் பெண், மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைப்பர். தாலிக்கயிறு மாற்றுவர்.)
இது தக்ஷணாயன புண்ய காலம். இனி வரும் 6 மாதமும் தேவர்களின் இரவு நேரம். எனவே தெய்வ வழிபாடு தொடர்ந்து இருக்கும்.
ஆடி செவ்வாய் – முருகனுக்கு உகந்த தினமான செவ்வாய் அன்று முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்வர். பலர் விரதம் இருப்பர். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு இந்த மூன்று நாட்களுமே சக்தி வழி பாட்டிற்கு மிகவும் உகந்ததாகக் கூறப்படுகின்றது. செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு குறிப்பாக துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லும் பெண்கள் அதிகமாக இருப்பார்கள்.
மேலும் ஆடி செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைப்பது, கூழ் ஊற்றுவது போன்ற அனைத்துமே அம்மன் கோவில்களிலும் நடைபெறும்.
அம்மனுக்கு வேப்பிலை மாலை, எலுமிச்சை மாலை மற்றும் சிகப்பு அரளி மாலை அணிந்து வழிபடுவர்.
ஆடி 1 வெள்ளி அன்று லட்சுமியினை வாழ்வில் வரம் வேண்டி வழிபடுவார்கள்.
ஆடி 2 வெள்ளி அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை இவர்களை அறிவு வேண்டி வழிபடுவார்கள்.
ஆடி 3 வெள்ளி அன்று அன்னை பார்வதி, காளி மாதா இவர்களை தைரியம், வளம் வேண்டி வழிபடுவார்கள்.
ஆடி 4 வெள்ளி அன்று காமாட்சி அன்னையை தன் உறவுகளோடு இன்பமாய் வாழ வழிபடுவார்கள்.
ஆடி 5 வெள்ளி – வரலட்சுமி பூஜை ஆகும். பவுர்ணமிக்கு முன்னே வரும் இந்த பூஜையினைச் செய்வது அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக அமையும்.
* ஆதி லட்சுமி: தனலட்சும், தான்யலட்சுமி, கஜலட்சுமி சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி. என அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக இப்பூஜை அமையும். இந்த பூஜையின் முக்கியத்துவத்தினை சிவபிரான் அன்னை பார்வதியிடம் கூறுவதாக ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேட்கும் வரத்தினை அருள்பவள் வரலட்சுமி. சிலர் கலகம் வைத்தும், சிலர் படம் வைத்தும் பூஜை செய்வார்கள். மேலும் வண்ண கோலம், வாசனைப்பூக்கள், தாம்பூலம், நெய்விளக்கு, மாவிலை தோரணம், அம்மனுக்கு அலங்காரங்கள் என நமது வீடே தெய்வீக கோலமும், மணமும் பெறும் இந்த ஆடி மாதத்தில்.