நாம் நல்லது என்று நினைத்து செய்யும் தவறான விஷயங்கள்.. உடலுக்கு கேடு விளைவிக்கும் செயல்கள்

பொதுவாக நம்முடைய வீட்டில் இருக்கும் பெரியவர்கள், அப்பா, அம்மா ஆகியோர் நம்மிடம் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி நிறைய அறிவுரை கூறுவார்கள்.

காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று அவர்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும்.

அதே போல நமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று யாராவது ஒருவர் நமக்கு உடல் நலம் பற்றிய குறிப்புகளை அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அதாவது இதைச் செய்தால் உடல் இளைக்கும், இந்த உணவு ஆரோக்கியம் என்று ஏதாவது சொல்வார்கள்.

நாமும் அதை நம்பி அதை பின்பற்றும் போது நமக்கு நல்லது நடந்தாலும் சில எதிர் வினைகளும் ஏற்படும். நான் நல்லது என்று நினைத்து செய்யும் பல செயல்கள் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் படி அமைந்து விடும்.

இதனால் நாம் சில உடல் உபாதைகளுக்கு ஆளாகக்கூடும். அப்படி எந்த விஷயங்கள் நம் உடலுக்கு ஆபத்தை கொடுக்கிறது என்பது பற்றி இங்கு காண்போம்.

நம்மிடம் அனைவரும் கூறும் ஒரு விஷயம் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும் என்பது தான்.

உண்மையில் அது ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும் அளவுக்கு அதிகமான தண்ணீர் குடிப்பதால் நம் உடல் பாதிப்புகளையும் சந்திக்கிறது.

என்ன வென்றால் அளவுக்கு அதிகமாக உடலில் தண்ணீர் சேரும் போது வயிறு உப்புசம், அஜீரணக் கோளாறுகள் போன்ற விளைவுகள் ஏற்படும். அதே போன்று ஒரு சிலர் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் பல் துலக்கிக் கொண்டே இருப்பார்கள்.

அதாவது ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் பல் விளக்குபவர்கள் உண்டு. இப்படி செய்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. இதன் மூலம் நம் பல் பலம் இழக்க ஆரம்பித்து விடும்.

அதனால் நாம் சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாகக் கொப்பளித்து சுத்தம் செய்தாலே போதும் பல் ஆரோக்கியமாக இருக்கும்.

அடுத்ததாக அளவுக்கு அதிகமாக தூங்குவதால் பல ஆபத்துகளை நாம் சந்திக்க நேரிடும். ஒவ்வொருவரும் ஆழ்ந்து தூங்குவது நம் உடலுக்கு நல்லது. ஆனால் அதுவே கொஞ்சம் அதிகமாக இருந்தால் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் வார இறுதியில் அளவுக்கு அதிகமாக தூங்கி ரெஸ்ட் எடுப்பார்கள்.

ஆனால் அப்படி செய்யும் போது நம் உடல் அதிக பருமனாக மாறக்கூடும். அது மட்டு மல்லாமல் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.

நேரத்திற்கு சாப்பிட்டு அளவாக தூங்குவது நமக்கு நல்லது. அதேபோன்று கார்போஹைட்ரேட் நிறைந்த பொருட்களை நம்மில் பலரும் தவிர்ப்பது உண்டு.

ஆனால் சொல்லப் போனால் நம் உடலுக்கு அந்த கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியமான ஒன்று. இது நம்முடைய மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.

ஆதலால் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை நாம் அளவாக எடுத்துக் கொண்டோம் என்றால் வீணான உடல் உபாதைகளை நம்மால் தவிர்க்க முடியும்.