தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தல என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் பார்க்காத தோல்விகளும் கிடையாது, அடையாத சாதனைகளும் கிடையாது.
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் ஒரு ஹீரோவாக நடிக்க வந்த இவருக்கு பல தடங்கல்கள் ஏற்பட்டது. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தனக்கு கிடைத்த தோல்விகளையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி அஜித் இன்று ஒரு உயர்ந்த நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
அந்த விதத்தில் இவர் தற்போது தன்னுடைய திரை பயணத்தில் 30 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறார். இதை அவருடைய ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் கடந்து வந்த பாதைகளை பற்றியும் அவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பவித்ரா, ஆசை, வான்மதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் காதல் கோட்டை.
அந்தப் படத்தை தொடர்ந்து அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, வில்லன் மங்காத்தா, விசுவாசம் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இவர் கொடுத்து இருக்கிறார். இடையில் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் இவர் இப்போது டாப் 5 நடிகர்களின் பட்டியலில் இருக்கிறார்.
மேலும் இப்போதைய முன்னணி ஹீரோக்களில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மட்டுமல்லாமல் கார், பைக் ரேஸ் ஆகியவற்றிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். இதனால் அந்தத் துறையிலும் இவர் ஏராளமான வெற்றிகளை ருசித்து இருக்கிறார்.
இது தவிர கொரோனா காலத்தில் ஆளில்லா ட்ரோன் விமானங்களை செய்து அசத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அந்த வகையில் இவர் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார். சமீபத்தில் கூட துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை இவர் வாரி குவித்து இருந்தார்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பல துறைகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்துள்ள அஜித் இன்றைய தலைமுறைகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கிறார். அந்த வகையில் 30 ஆண்டுகளாக சினிமாவில் சாதித்துக் கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.