ஏலியன்களால் விண்வெளியில் இருந்து சிக்னல்கள் அனுப்பப்படுகிறதா? குழம்பும் ஆராய்ச்சியாளர்கள்!

விண்வெளியின் தொலைதூரப் பகுதியில் இருந்து சமீபத்தில் பதிவாகியிருக்கும் சக்திவாய்ந்த ரேடியோ சமிக்ஞைகள் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விண்வெளியிலிருந்து பதிவாகும் ரேடியோ துடிப்புகளுக்கு துரித ரேடியோ துடிப்புகள் (Fast radio burst) என்று பெயர். இது எதனால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகளால் இதுவரை தெளிவாக விளக்க முடியவில்லை. துரித ரேடியோ துடிப்புகள் உருவாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நட்சத்திர வெடிப்புகளிலிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவிலிருந்து இந்த சமிக்ஞைகள் வருவதாக கருதப்படுகிறது.

அவ்வாறு 2019 ல் வெறும் 47 நாட்களில் 1652 ரேடியோ துடிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இதுவரை இவ்வளவு அதிகமான துடிப்புகள் விண்வெளியிலிருந்து உணரப்பட்டதில்லை.

முதன்முதலில் 2007-ல் ரேடியோ துடிப்புகளை கண்டறிந்த போது ஆராய்ச்சியாளர்களே ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.

இந்த துடிப்புகளைக் கொண்டு பல கோடிக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவில் எங்கிருந்து இந்த ரேடியோ அலைகள் உருவாகின்றன என்று ஆராய்ச்சியாளர்களால் ஆராய முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் இந்த ரேடியோ அலைகள் திடீரென தோன்றி உடனே மறைந்து விடுகின்றன எனவே அவை எங்கிருந்து உருவாகின்றன என்பதை கண்டறிவது மிக கடினமாக இருக்கிறது. அதனால்தான் ஆராய்ச்சியாளர்களால் அவற்றின் மூலத்தை தெளிவாக கண்டறிய முடிவதில்லை.

சமீபத்தில் பால்வெளி அண்டத்தில் இருக்கும் நியூட்ரான் நட்சத்திரமான மெக்னடார்சிலிருந்து இந்த ரேடியோ அலைகள் உருவானது கண்டறியப்பட்டது.

FRB121102 என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ரேடியோ அலை தொகுப்பு 3 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள அண்டத்திலிருந்து உருவாவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அலைகள் மிகத் துடிப்பாக செயல்படுகின்றன. 90 நாட்களுக்கு ஒரு முறை உருவாகும் இந்த அலைகள் 67 நாட்களுக்கு அமைதி காக்கின்றன.

சமீபத்தில் FAST எனப்படும் ரேடியோ தொலைநோக்கி 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து மேலும் பல புதிய ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு சொன்னால் வெறும் 59 மணி நேரத்தில் 1652 அலைகள் 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டதை சொல்லலாம்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த அலைகள் உருவாவதற்கான சரியான காரணம் தெரியாவிட்டாலும் இவை வேற்று கிரக வாசிகளால் வெளியிடப்படுகின்றனவா என்ற கோணத்திலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.