நீளம் என்ற சொல்லுக்கு எப்போதும் தனிப்பெருமை உண்டு. அவ்வகையில் உலகின் மிக நீளமான கடல், மலை, சாலை என பல உள்ளது. இந்த வரிசையில் அணையும் உள்ளது.
உலகின் மிக நீளமான அணை எதுவென்று தெரியுமா?
உலகின் மிக நீளமான அணை ஹிராகுட் அணை. இந்த அணை கொள்ளவின் அடிப்படையில் சிறியது என்றாலும் நீளத்தின் அடிப்படையில் பெரியது.
ஹிராகுட் அணையின் மொத்த நீளம் 4.8 கி.மீ. ஆகும். அணையின் உயரம் 60.96 மீட்டர் ஆகும். இப்படியான அணை எங்கிருக்கிறது என்று கேள்விகள் எழும்புமாயின், அதற்கு பதில் இந்தியாதான்.
ஆம், இந்த ஹிராகுட் அணையானது ஓடிசா மாநிலத்தில் சாம்பல்பூர் என்ற பகுதியில் உள்ளது.
ஹிராகுட் அணையானது மகாநதி ஆற்றை தடுத்து கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையானது 55 கிலோ மீட்டர் சுற்றளவில் நீர்பிடிப்பு பகுதியை கொண்டு உள்ளது.
இந்த அணைதான் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கட்டப்பட்ட முதல் பெரிய அணை. 1948-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த அணை 5-வருடங்கள் கழித்து 1953-ம் ஆண்டுதான் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையை 1957-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார்.
1936-ம் ஆண்டு மகாநதி படுகையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளப் பிரச்சனையை சமாளிக்கவே பொறியாளார் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா அங்கு அணை கட்ட பரிந்துரை செய்தார்.
1945-ம் ஆண்டு மகாநதியில் அணை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
1946-ம் ஆண்டு ஒடிசா ஆளுநராக பதவி வகித்த சர் ஆதோரன் இலூயிஸ் என்பவர் ஹிராகுட் அணை கட்ட அடிக்கல் நாட்டினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1948-ம் ஆண்டு முதல் தொகுதி கட்டுமானப்பணியைத் துவங்கி வைத்தார். 1953-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு 1957-ஆம் நேருவால் அணை திறக்கப்பட்டது.
அப்போதைய மதிப்பில் 1 பில்லியன் ரூபாய் பொருட்செலவில் அணை கட்டிமுடிக்கப்பட்டது. இதுவே இன்று வரை உலக அளவில் நீளமான (4.8 கி.மீ.) சுவர் கொண்ட அணை என்பது குறிப்பிடத்தக்கது.