முகத்தை ஜொலிக்க வைக்கும் பச்சை பயிறு.. இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பெண்கள் தங்களுடைய அழகை பாதுகாக்க பல செயற்கை வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் பியூட்டி பார்லர் போன்ற இடங்களுக்கு சென்று ஏகப்பட்ட செலவுகளை செய்து தங்கள் அழகுகளை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

ஆனால் கிராமப்புறங்களில் இப்பொழுதும் கூட பெண்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இயற்கையான அழகுடன் மிளிர்கின்றனர். அவர்கள் எந்த ஒரு செயற்கை பொருட்களையும் பயன்படுத்துவது கிடையாது. இதன்மூலம் அவர்களுடைய சருமமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.

நம் வீடுகளில் நாம் அன்றாடம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களை வைத்தே நம்மால் நம் அழகை பாதுகாக்க முடியும். இந்த முறையை தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அதையே இப்போதும் பல கிராமங்களில் கடைபிடித்து வருகின்றனர்.

அப்படி நம் சருமத்தை பாதுகாக்க கூடிய மிக முக்கியமான பொருளில் ஒன்றுதான் பச்சை பயிறு. இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் வெயில், தூசி போன்ற பல காரணங்களால் சருமங்களில் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. அதிலும் வெயில் காலங்களில் வியர்க்குரு, அலர்ஜி போன்ற பல விஷயங்கள் நம்மை பாடாய் படுத்தி வருகிறது.

அதிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க இந்த பச்சை பயிறு நமக்கு பெரிதும் உதவும். இந்த கலவையை எப்படி செய்வது என்று இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

பச்சை பயிறு 3 ஸ்பூன்

கடலைப்பருப்பு 2 ஸ்பூன்

தயிர் தேவையான அளவு

மஞ்சள் தூள் சிறிதளவு

செய்முறை

கொடுக்கப்பட்டுள்ள பச்சை பயிறு மற்றும் கடலைப் பருப்பை நன்றாக பொடி செய்து அந்த கலவையில் தயிர், மஞ்சள் தூள் இவற்றை சேர்க்க வேண்டும்.

பின்பு இந்த கலவையை நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இதை முகம், கை, கால்கள் போன்றவற்றில் தடவவும்.

சரியாக 20 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும்.

இதை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வர வெயிலினால் ஏற்பட்ட சரும கோளாறுகள் நீங்கும்.

மேலும் இதை தொடர்ந்து செய்து வரும்போது வியர்க்குரு, சருமநோய்கள், வெயிலினால் ஏற்படும் கருமை போன்றவற்றிலிருந்து நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கும் இந்த பச்சை பயிறு மிகவும் உதவியாக இருக்கும். வெறும் பச்சை பயிறு மாவை குழந்தைகள் குளிக்கும் போது சோப்பிற்கு பதில் பயன்படுத்தலாம். இதையே தொடர்ந்து செய்து வந்தால் குழந்தைகள் சருமம் பட்டுபோல் ஜொலிக்கும். வேறு எந்த விதமான சரும நோய்களும் அவர்களைத் தாக்காது.

நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த இதுபோன்ற இயற்கை விஷயங்களை நம் இன்றைய தலைமுறைகளும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.