திருமணத்திற்கு முன்பாக வீட்டின் முன்பு முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவதும் மாவிலைத் தோரணம் கட்டுவதும் மரபு. முதலில் பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமத்தாலும் மாவிலையினாலும் அலங்கரித்து ஈசான்ய பாகத்தில் ( வடகிழக்கு) நடுவது வழக்கம்.
வடகிழக்கு மூலையை “ஈசான திசை” எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
முற்காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைத்து திருமணத்திற்கும் அரசனால் செல்ல இயலாது. எனவே அவர் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசு ஆணைக்கோல் மருவி அரசாணைக்கால் ஆகிவிட்டது.
அன்று ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அங்கீகரிக்கப் பட்டு விட்டது என்று அர்த்தம். அதாவது அத்திருமணம் அங்கீகாரம் பெற்றுவிடுகிறது. இந்த முறை தொன்றுதொட்டு தொடர்ந்து பந்தக்கால் நடும் முறையாக இன்று நம்மிடையே வளர்ந்து வந்துள்ளது. பந்தக்கால் நட்ட பிறகு பந்தல் போடும் வேலையும் தொடர்ந்து செய்வர்.
பின் உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் விருந்துண்டு மகிழ்வர். முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்வுகளிலும் பங்கு பெறுவது கூடாது.