கோயில் குளத்தில் காசு போடுவது ஏன்?

கோயிலுக்குச் சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம். இதை ஒரு சம்பிரதாயமாக நினைத்து பலரும் செய்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை நாம் தெரிந்து கொள்வோம்.

தமிழர்கள் கோயில்களுக்குச் சென்றால், அங்கு உள்ள கிணறுகளிலும், தெப்பக் குளங்களிலும் காசு போடும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. அக்காலத்தில் போடப்பட்ட காசுகள் பெரும்பாலும் செம்பு உலோகத்தால் தயாரிக்கப்பட்டவை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். செம்பு உலோகமானது பாறை, மண், நீர், வண்டல் மற்றும் காற்றில் இயற்கையாக உருவாகிறது.

நல்ல ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு சில உலோகங்கள் நமது உடலில் கலப்பது அவசியம். அந்த வகையில் செம்பு உடலிற்கு ஆற்றலைத் தரக்கூடியது. செம்புவை தண்ணீருக்குள் போட்டு வைப்பதும், தண்ணீர் எடுக்கப் பயன்படுத்துவதும் என செம்பு பாத்திரங்கள் உபயோகிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

கிணறு, குளங்களில் உள்ள தண்ணீருடன் செம்பு கலந்த பின் அந்த நீரை அருந்துவதில் வலிமையும், குளிர்ச்சியையும் தந்து நலன் பயக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஏரிகள் ஆகியவையே அடிப்படை நீர் ஆதாரங்களாக இருந்தன.

குளம் இல்லாத கோவிலைப் பார்ப்பதே அரிது. கோயில் குளத்து நீரை தீர்த்தமாக மதித்தே மக்கள் அருந்தினார்கள். இதனால் செப்பு காசுகளை குளத்தில் போடுவது வழக்கமாக இருந்தது. அக்கால முறையான காசு போடுவதையே, இன்றும் ஒரு வழக்கமாக நினைத்து நம்மில் பலர் இரும்பு காசுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அது தவறான செயலாகும். ஆனால், செம்பு காசுகளை குளத்தில் போடுவதில் நமக்கு நன்மை பயக்கும். நம்முடைய தமிழரின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. மஞ்சள் தெளிப்பது, பாயில் உறங்குவது என அனைத்தும் அறிவியலுடன் கலந்ததுதான். நாம் செய்யும் அனைத்து செயலுக்குப் பின்னாலும் அறிவியல் உள்ளது. நாமும் பின்பற்றுவோம் அதை பிறருக்கும் எடுத்துக் கூறுவோம்.