வீட்டில் துளசி மாடம் வைக்கும் முறைகளும், அதன் நன்மைகளும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு சில ஆன்மீக ரீதியான பரிகாரங்களை செய்யலாம். இதற்காக நாம் அதிக அளவு பணம் செலவு செய்ய தேவையில்லை. மனதில் இறை நம்பிக்கையோடு துளசி வழிபாட்டை செய்து வந்தால் போதும்.

இதை ஆண் மற்றும் பெண்கள் இருவரும் செய்யலாம். மனதும், உடலும் சுத்தமாக இருக்கும் யாராக இருந்தாலும் இதை செய்யலாம். புனிதமான துளசியை மனதார வழிபட்டு வந்தால் நமக்கு இருக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பல நன்மைகளை தரும் இந்த துளசி செடியை நம் வீடுகளில் வைத்து எப்படி பூஜை செய்யலாம் என்பதை பற்றி இன்று காண்போம்.

வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி, லக்ஷ்மி கடாட்சம் நிறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை தாராளமாக பின்பற்றலாம். இந்த வழிபாட்டிற்கு துளசி மாடம் மிகவும் முக்கியம். அதன் மேல் துளசி செடியை வைத்து வழிபட்டால் தான் பலன்கள் அதிகமாகக் கிடைக்கும்.

இந்த துளசி மாடம் வீட்டின் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும். ஒருவேளை அந்த இடத்தில் வைக்க முடியவில்லை என்றால் நம் வீட்டின் மொட்டை மாடியில் துளசி மாடத்தை அமைக்கலாம். இந்த துளசியை வழிபடுபவர்கள் நிச்சயம் விஷ்ணுவையும் சேர்த்து வழிபட வேண்டும். இதன்மூலம் முழு பலன்கள் நமக்கு வந்து சேரும்.

மேலும் துளசி மாடத்தை பிரதிஷ்டை செய்யும்போது முதலில் சங்கை வைத்து அதன் மேல் மண்ணைப் போட்டு மூடி தண்ணீர் தெளித்து 3 துளசிச் செடிகளை நட்டு வைக்க வேண்டும். இதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

துளசி மாடத்தை வழிபட்டு வருபவர்கள் தினந்தோறும் அதற்கு பூஜை செய்வது அவசியம். பஞ்சலோகத்தால் ஆன பாத்திரத்தில் பூஜை செய்வதற்கு தேவையான தண்ணீரை வைத்து இருக்க வேண்டும். மேலும் பூஜைக்கு பழம், கல்கண்டு போன்றவற்றை நெய்வேத்தியம் செய்யலாம்.

துளசி மாடத்தின் கீழ் அகல் விளக்கை ஏற்றி வைத்து வழிபடுதல் முக்கியம். பூஜை முடிந்த பிறகு ஒன்பது முறை துளசி மாடத்தை கட்டாயம் சுற்றி வரவேண்டும். நம்மால் முடிந்தால் இருபத்தி ஏழு முறை கூட சுற்றி வரலாம். காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தவறாமல் பூஜை செய்ய வேண்டும். மேலும் மாமிசம் சாப்பிடாமல் இந்த துளசி மாட பூஜையை செய்யும் போதுதான் நமக்கு முழு பலன் கிட்டும்.

மேற்கண்ட இந்த முறைகளை நாம் தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் நீங்குவதை நம்மால் தெளிவாக உணர முடியும். அது மட்டுமல்லாமல் துளசி மாடம் இருக்கும் வீட்டில் துர்மரணம் வரவே வராது. அதேபோன்று தீராத நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும். இந்தத் துளசி மாட பூஜையை செய்ய ஆரம்பித்த 7 நாட்களிலேயே நாம் பலனை காணலாம்.