குழந்தை போல குதூகலிக்க வைக்கும் நீர்வீழ்ச்சி.. கேரளாவில் எங்கு இருக்கு தெரியுமா.?

கேரளாவில் கோட்டயம் என்னும் பகுதியில் இரு நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவை அருவிக்குழி நீர்வீழ்ச்சி மற்றும் வாகமன் நீர்வீழ்ச்சி. முதலில் அருவிக்குழி நீர்வீழ்ச்சி பற்றி பார்ப்போம். இந்த நீர்வீழ்ச்சி கண்ணைக்கவரும் அழகோடு காட்சியளிக்கும். இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி குமரகம் அருகிலேயே உள்ளது. கோட்டையம் நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் குமரகம் செல்லும் வழியிலேயே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி பகுதி, இயற்கை சூழலில் நடைபயணம் மேற் கொள்வதற்கு ஏற்ற இடமாகும்.

இந்த நீர்வீழ்ச்சியில் 100 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்ட பாறை அமைப்பின் வழியாக நீர் சரியும் காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் திணற வைக்கிறது. பரந்த ரப்பர் மரக்காடுகளின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கும் உல்லாச பிக்னிக் பொழுது போக்குகளுக்கும் இந்த ஸ்தலம் ஏற்றதாகும். இயற்கையின் தூய்மை மிளிரும் இச்சூழலானது இயற்கை ரசிகர்களையும் புகைப்பட ஆர்வலர்களையும் வசியப்படுத்தி விடுகிறது.

குமரகம் நகரத்தில் இருந்து நடக்கும் தூரத்திலேயே உள்ள இந்த நீர்வீழ்ச்சியின் சத்தத்தை வெகு தூரத்தில் இருந்தே பயணிகள் கேட்கமுடியும். மழைக்காலத்தில் படிகம் போன்ற புதிய நீரானது வேகத்துடன் இந்த நீர்வீழ்ச்சியில் வழிகிறது. மழைக்காலம் முடிந்தபின், கோடை துவங்குவதற்கு முன் உள்ள இடைப்பட்ட காலம் இந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசிக்க ஏற்ற பருவமாகும்.

இறுதியாக வாகமன் நீர்வீழ்ச்சி பற்றி பார்ப்போம். இது ஒரு ஏரியில் இருந்து ஒரு சிறு நீரோடை போன்று இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது. இந்த நீர்வீழ்ச்சியின் பின்னணியில் பசுமையான பாறைத்திட்டுகளும் அடர்ந்த காடுகளும் வீற்றுள்ளன. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை மலையேறிகள் மத்தியில் மிகப்பிரசித்தமாக அறியப்படுகிறது.

இந்த நீர்வீழ்ச்சி ரசிக்கப்படுவதற்கான காரணம் இதன் பிரம்மாண்டமோ அல்லது உயரமோ இல்லை. மாறாக இது உருவாகும் ஏரி மற்றும் இதைச் சூழ்ந்திருக்கும் பசுமையான மலைகள் போன்றவற்றுக்காகவே இது பிரசித்தி பெற்றுள்ளது. கவலைகளை மறந்து இயற்கையோடு இயற்கையாக ஒன்றி மனதையும் லேசாக்கிக் கொள்ள இது மிகவும் ஏற்ற இடமாகும்.

இந்த இடத்தில் நின்று இயற்கையின் எழிலை தரிசித்த தருணமானது என்றுமே மறக்கமுடியாத ஒன்றாக மனதில் பதிவது நிச்சயம்.