அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து நடக்கும் கல்யாணம்.. எதற்காக தெரியுமா?

காலம் காலமாக நம் நாட்டில் நடக்கும் திருமணங்களில் ஏகப்பட்ட சடங்குகள் செய்வதுண்டு. அதிலும் தமிழ் முறைப்படி நடக்கும் நம் இந்து திருமணத்தில் ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுவது உண்டு.

இப்படி நடக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கு பின் ஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது. மணமகன் பெண்ணின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டுவதில் இருந்து அம்மி மிதிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்கள் திருமணத்தின்போது நடைபெறுகிறது.

அதில் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் வழக்கம் பண்டைய காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சம்பிரதாயம் எதற்காக செய்யப்படுகிறது என்பதை இப்போது நாம் விரிவாக காணலாம்.

அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு உறுதியான அம்மி திருமண சடங்குகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. மணப்பெண்ணின் கால் கட்டை விரலை பிடித்து அம்மி மீது வைத்து மணமகன் மெட்டி அணிவிப்பார்.

இதற்கு காரணம் இந்தத் திருமண வாழ்க்கையில் மணப்பெண்ணுக்கு இன்பம், துன்பம் என்று அனைத்தும் மாறி மாறி வரக்கூடும். அப்படி இல்லற வாழ்வில் வரும் கஷ்டங்களை மனம் கலங்காமல் உறுதியுடன் தாங்கி நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சடங்கு பின்பற்றப்படுகிறது.

இந்த சம்பிரதாயத்திற்கு பிறகு அருந்ததி பார்க்கும் விஷயமும் இருக்கிறது. இதற்கு அர்த்தம் சப்தரிஷியான வசிஷ்ட முனிவர் வானில் நட்சத்திரமாக இருக்கிறார். அவருடன் ஒட்டி இணைந்தார் போன்று அருந்ததி நட்சத்திரமும் இருக்கிறது. இந்த அருந்ததி தான் வசிஷ்டரின் மனைவி ஆவார்.

புதிதாக திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலை வந்தாலும் ஒருவரை ஒருவர் பிரியாமல் இணைந்தே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அருந்ததி பார்க்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

மேலும் மணமக்கள் இருவரும் உருவத்தில் தனித்தனியாக இருந்தாலும், மனதளவில் ஒன்றாக இணைந்து, வாழ்க்கையில் நேரும் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை கூறுவதே இந்த அருந்ததி பார்த்தல் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இதையே நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர்.