வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?.. சாஸ்திரங்கள் கூறுவது என்ன

பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அவைகளில் சிவன் அழிக்கும் கடவுளாக இருக்கிறார். சைவ சமயக் கடவுளான இதுவரை ஏராளமான மக்கள் வழிபட்டு வருகின்றனர். சிவனைப் போற்றும் பல கோவில்களும் இருக்கின்றன.

ஆனால் சிலர் சிவபெருமானை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட விரும்புகின்றனர். அதனால் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்து வரும் சிலரும் இருக்கிறார்கள். உண்மையில் சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து இருக்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஏனென்றால் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதற்கு என்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை நாம் சரியாக பின்பற்ற வேண்டும் அப்படி விதிகளை மீறினால் நமக்கு பாவங்கள் வந்து சேரும். மேலும் வாழ்வில் நிறைய சிக்கல்களும் உருவாகும் என்பது ஐதீகம்.

அதனால் பெரும்பாலான மக்கள் சிவனை கோவில்களில் மட்டுமே வழிபட்டு வருகின்றனர். யாரும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை. அதையும் மீறி சிலர் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடும் போது பின்வரும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பொதுவாக வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடும் இடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதிலும் சிவனை நாம் வசதியாக அமர்ந்து வழிபடும் விதமாக அந்த இடம் இருக்க வேண்டும். அதனால் அதற்கு ஏற்றவாறு இடத்தை நாம் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் சிவனுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வைத்து படைக்கக்கூடாது. அதனால் மறந்தும் கூட இந்த பொருட்களை சிவலிங்கத்தின் மேல் தடவி விடாதீர்கள். சுத்தமான திருநீறு தான் சிவனுக்கு ஏற்றது.

இந்த மஞ்சள் குங்குமத்தை சிவனுக்கு படைக்கக் கூடாது என்பதற்கு பின் சில காரணங்களும் இருக்கிறது. பொதுவாக பெண்கள் தங்களுடைய கணவர்களின் ஆயுள் நீடிக்க வேண்டும் என்பதற்காக இந்த மஞ்சள், குங்குமத்தை வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் சிவன் ஒரு அழிக்கும் கடவுள். அதனால்தான் சிவலிங்கத்தின் மீது ஒருபோதும் மஞ்சள், குங்குமத்தை தடவக் கூடாது என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் இதை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு சிவனை வழிபட வேண்டும்.

மேலும் வீட்டில் வைக்கப்படும் சிவலிங்கம் தங்கம், வெள்ளி அல்லது பித்தளையில் இருக்க வேண்டும். அதேபோன்று துளசி இலைகளை சிவலிங்கத்திற்கு படைக்கக் கூடாது. வில்வ இலைகளை கொண்டு தான் சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய வேண்டும்.

தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து சுத்தமாக பூஜைக்குத் தயாராக வேண்டும். சிவலிங்கத்திற்கு தேங்காய் நீர் கொண்டு அபிஷேகம் செய்ய கூடாது. தேங்காயை படைக்க வேண்டும். அதே போன்று தாழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி போன்ற பூக்கள் வைத்து பூஜை செய்யக்கூடாது. ஏனென்றால் இந்தப் பூக்களை சிவபெருமான் சபித்து விட்டதாக கூறப்படுகிறது.

சிவலிங்கத்தின் மீது காலை, மாலை இரு வேளைகளிலும் நீர் துளி விழும் வகையில் நீர் ஊற்று அமைக்க வேண்டும். மேலும் சிவலிங்கத்தின் அருகாமையில் தேவியின் சிலை இருப்பதை கவனிப்பது சிறப்பு.

மேலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நீங்கள் இருக்கும் வீட்டை வேறு இடத்திற்கு மாற்ற நேரும்போது சிவலிங்கத்தை ஒருமுறை கங்கை மற்றும் குளிர்ந்த பாலில் அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் நமக்கு நன்மைகள் பல உண்டாகும். மேற்கண்ட இந்த வழிமுறைகளை நாம் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டும்.