மகிழ்ச்சியாக வாழ இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க!

எதிலும் மகிழ்ச்சி என்ற காலம் சென்று இப்போது, மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று தேடும் காலம் வந்துவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக, இயந்திர உலகில் நிற்காமல் ஓடும் நாம் குடும்பத்தினரிடம் கூட ஒழுங்காய் பேசுவதில்லை. சரி வாருங்கள் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

பிடித்த வேலையை செய்தல்: உங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டாலே நீங்கள் மகிழ்ச்சியாய் உணர்வீர்கள். இங்கே அனைவரும் பிடித்த வேலைக்கு செல்வதில்லை, 90 சதவிகிதம் கிடைத்த வேலைகளை செய்து வருகிறோம். அப்படியிருக்க, ஒவ்வொருவருக்கு ஒரு வகையான விடயம் பிடிக்கும். ஒரு சிலருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும், சிலருக்கு எழுத பிடிக்கும், சிலருக்கு பாட பிடிக்கும் ஒரு சிலருக்கு இசையை கேட்டு ரசிக்க பிடிக்கும் இப்படியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல் மிகவும் பிடிக்கும். அப்படி பிடித்தமான செயல்களில் ஈடுபட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

இணையத்திற்கு விடுமுறை: இன்றைய உலகில் அனைவருக்கு தனித் தனி கைப்பேசி, அருகிலே இருந்தாலும் நாம் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி தான் அழைக்கிறோம். ஏதோ ஒன்றை பார்க்க சென்று கைப்பேசியை எடுத்தால், தேவையற்றதை பார்த்து நேரத்தை வீணடிப்பதோடு மட்டுமல்லாமல், சில விடயங்களுக்கு மனம் நொந்து போகிறோம். இதனை அவ்வப்போது நாம் புரிந்துக் கொண்டாலும் வேறு வழியில்லாமல் பார்க்கிறோம். சரி போகட்டும் இதை பார்க்காமல் சிறிது நேரம் வேறு ஏதேனும் செய்யலாம் என்று நம்மை நாமே மாற்றிக் கொள்ளவது நல்லது. இதுவும் ஒரு வகையி உங்கள் மனதிற்கு அமைதியைத் தருவதோடு மன மகிழ்ச்சியையும் தரும்.

நன்றி தெரிவிக்க மறவாதீர்கள்: சின்ன உதவியாகவும் இருக்கலாம் பெரிய உதவியாகவும் இருக்கலாம். அப்படி எந்த ஒரு உதவியாக இருந்தாலும் நன்றி சொல்ல வேண்டும். சரி நன்றி சொன்னால் மகிழ்ச்சியாக இருந்திட முடியுமா என்று கேட்கின்றீர்களா? சின்ன விடயத்திற்கு நன்றி சொல்லிப் பாருங்கள் நீங்களே உணருவீர்கள்.

இயற்கையோடு ஒன்றிணையுங்கள்: உங்களுக்கு பிடித்தமான பகுதிகளுக்கு செல்வது மன மகிழ்வை உண்டாக்கும். அதுவும் இயற்கை எழில் மிக்க பகுதிகளுக்கு சென்று ஓய்வெடுப்பது அல்லது ஓடி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மேலும் மன மகிழ்வை உண்டாக்கும்.

தியானம் செய்யுங்கள்: மனம் அமைதி பெற்றாலே மன மகிழ்வும் வந்துவிடும். தியானம் செய்து மனதை ஒருநிலை படுத்துவதன் மூலம் மன நிம்மதியைப் பெறலாம். அமைதியாக இருந்து மனதை ஒருநிலைப்படுத்துவதும் ஒருவகையான தியானம் தான் அதையும் நீங்கள் செய்யலாம்.

முடியாது என்று சொல்லுங்கள்: சில விடியங்களுக்கு முடியாது என்று சொல்வதே நல்லது. நம்மால் முடியாது என்றும் தோன்றும் விடயங்களுக்கு உடனே முடியாது என்று சொல்வது நமக்கு மன மகிழ்வினை உண்டாக்கும். அடுத்தவர் வேலையை சேர்த்தும் உங்களது வேலையும் பார்க்கும் போது சில சமயங்களில் முடிக்க முடியாமல் போகலாம். தன்னால் முன்பே முடியாது என்று சொல்வது நல்லது.

பிடித்தவர்களுடன் பேசுங்கள்: ஒவ்வொருவருக்கும் ஒரு சிலரை பிடிக்கும், அப்படி உங்களுக்கு மனதார பிடித்த நபரிடம் பேசுங்கள். உங்கள் உணர்வுகளை புரிந்துக் கொள்பவர்களிடம் மட்டும் உங்கள் உணர்வுகளை பகிருங்கள். அப்போது மேலும் மன மகிழ்வு உண்டாகும். நீங்கள் எதிர்மறையான எண்ணத்தில் இருந்தாலும் உங்களுக்கு பிடித்தவரிடம் பேசினால் போதும் அனைத்தும் நேர்மறையாக மாறி மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.