காரசாரமான கிராமத்து ஸ்டைல் நண்டு மசாலா.. அசைவ பிரியர்களுக்கான சூப்பர் டிஷ்

அசைவ உணவுகள் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் விதவிதமான அசைவ உணவுகளை வாங்கி உண்பதே பலருக்கு பொழுதுபோக்காக இருக்கும். இந்த உணவுகள் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றமாதிரி வெவ்வேறு சுவைகளில் நமக்கு கிடைக்கும்.

சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை போன்றே நண்டும் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு. இந்த நண்டை சூப், குழம்பு, கிரேவி என்று எப்படி வேண்டுமானாலும் நாம் செய்யலாம். அதில் நண்டு மசாலா எப்படி செய்வது என்று இப்போது காண்போம்.

தேவையான பொருட்கள்

 • நண்டு அரை கிலோ
 • சின்ன வெங்காயம் 15
 • தக்காளி 2
 • நல்லெண்ணெய் தேவையான அளவு
 • சோம்பு ஒரு ஸ்பூன்
 • சீரகம் ஒரு ஸ்பூன்
 • மிளகு ஒரு ஸ்பூன்
 • தேங்காய்த்துருவல் 4 டேபிள் ஸ்பூன்
 • வர மிளகாய் 4
 • இஞ்சி சிறிதளவு
 • பூண்டு தேவையான அளவு
 • தனியா 2 ஸ்பூன்
 • மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
 • உப்பு தேவையான அளவு
 • கருவேப்பிலை சிறிதளவு
 • மல்லித்தழை சிறிதளவு
 • கிராம்பு ஒன்று
 • பட்டை 1
 • லவங்கம் ஒன்று
 • ஏலக்காய் ஒன்று

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு அதில் மிளகு, சீரகம், சோம்பு, வர மிளகாய், இஞ்சி, பூண்டு, தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.

பிறகு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைத்து விடவும்.

இந்த கலவை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Also read: முருங்கக்காய் மசால் வடை செய்வது எப்படி.? புது வகையான ஈவினிங் ஸ்னாக்ஸ்

பின்னர் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், இலவங்கம் ஆகியவற்றை சேர்க்கவும்.

பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வறுக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் சேர்க்கவும். மிதமான சூட்டில் இதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு கலந்து விடவும்.

அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள நண்டை அதில் சேர்த்து நன்றாக பிரட்டவும். 2 நிமிடம் கழித்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

நண்டு நன்றாக வெந்து மசாலா தயார் ஆனதும் கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.

இப்பொழுது காரசாரமான நண்டு மசாலா தயார் ஆகிவிட்டது. இந்த நண்டு மசாலா சாதம், ரசம், தயிர் போன்ற அனைத்து உணவுகளுக்கும் நல்ல காம்பினேஷன்.

அதேபோன்று சளி தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நண்டு மிகவும் நல்லது. மேலும் இந்த நண்டு உடலுக்கு கொஞ்சம் சூடு என்பதால் எப்போதாவது இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.