முருங்கக்காய் மசால் வடை செய்வது எப்படி.? புது வகையான ஈவினிங் ஸ்னாக்ஸ்

என்னது முருங்கக்கா மசால்வடையா? அதை வைத்து எப்படி வடை செய்வது? அதை குழம்பில் போடுவார்கள் மற்றும் வறுவல் செய்வார்கள். ஆனால் அதை வைத்து எப்படி வடை செய்ய முடியும் என்று தானே அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் இதை வைத்து வடை செய்து பாருங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி முருங்கக்கா மசால்வடை எப்படி செய்வது என்று பார்ப்போமா.

தேவையான பொருட்கள்

1-கப் கடலைப்பருப்பு
3-முருங்கைக்காய்
3-பெரிய வெங்காயம்
2-பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் சோம்பு
உப்பு தேவைக்கேற்ப
கருவேப்பிள்ளை
கொத்தமல்லி

செய்முறை

ஒரு கப் அளவிற்கு கடலை பருப்பை எடுத்து ஊற வைக்கவேண்டும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை நன்றாக ஊற வைத்துவிட வேண்டும். ஒரு மூணு முருங்கைக்காயை எடுத்து நறுக்கி கொள்ள வேண்டும். உங்களுக்கு வேண்டும் அளவிற்கு முருங்கைக்காய் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் நறுக்கிய முருங்கைக்காயை தண்ணீர் ஊற்றி நன்கு அலச வேண்டும். அதன்பின் ஒரு குக்கரில் முருங்கைக்காயை போற்று கம்மியான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் குக்கரில் போட்டு 2 விசில் வந்தவுடன் அதை கீழே இறக்கி விடவும். இறக்கியவுடன் நன்கு வெந்த முருங்கைக்காயை எடுத்து ஒரு ஸ்பூனை வைத்து அதனுள் உள்ள முருங்கையின் சதையையும், வெதையையும் எடுத்து ஒரு தனி பாத்திரத்தில் போட வேண்டும். அதன்பின் மூன்று பெரிய வெங்காயத்தை எடுத்து பொடிதாக நறுக்கி அதனுடன் இரண்டு பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

Also read: இப்படி ஒரு குழம்ப நீங்க எங்கயும் கேள்விபட்டிருக்க மாட்டீங்க.. சுவையான அப்பள குழம்பு செய்வது எப்படி.?

இதனுடன் சேர்த்து சிறிதளவு கறிவேப்பிள்ளை, சிறிதளவு கொத்தமல்லி எடுத்து நறுக்கி வைக்கவும். பின்னர் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டியப்பின் வாசனைக்காக ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி பின், அதன்பின் மிக்ஸியில் தனியாக பிரித்து வைத்த முருங்கையின் சதையையும் வெதையையும் சேர்த்து ஒரு சுத்து மட்டும் சுத்தி எடுத்து விடவேண்டும்.

அரைத்த பின் ஒரு குண்டானில் அந்த பருப்பை சேர்த்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிள்ளை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொள்ளலாம். தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் மட்டுமே இந்த பதத்திற்கு வரும். அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்த பின் உருண்டையாக உருட்டி வைத்த பின் அனைத்தையும் இரண்டு உள்ளங்கையால் நமக்கு வேண்டும் அளவிற்கு தட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின் ஒரு கடாயில் அரை லிட்டர் அளவிற்கு எண்ணையை ஊற்றி நன்கு எண்ணெய் காய்ந்த பின் நாம் தட்டி வைத்த வடையை எண்ணெயில் போட்டு வடையின் இரண்டு புறமும் பொன்னிறமாக சிவந்தவுடன் வெளியில் எடுத்து விடவும். சூடாக அனைவருக்கும் பரிமாறினால் அனைவரும் விரும்பி உண்பார்கள். சுவையை அறிந்த பின் மீண்டும் மீண்டும் செய்து கொடுக்க சொல்வார்கள். இதை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Also read: இறால் முட்டை மசாலா செய்வது எப்படி?