உங்கள் முடி உதிர்வதற்கான காரணம் தெரியுமா?

கோடையில் சூரியனிடமிருந்து வரும் அதிகமான வெப்பக்கதிர்கள் சருமத்தை மட்டுமல்லாது கூந்தலையும் பாதிப்பதால் முடி உதிர்ந்து, முடி வறட்சியாகும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பெண்கள் உட்பட அனைவருக்கும் ஏற்படுவதையடுத்து, கூந்தல் வறண்டு, சிக்கு ஏற்படாமல் மென்மையாக இருப்பதற்கும், முடி அதிகம் கொட்டாமல் இருப்பதற்குமான எளிய வழிகளை காணலாம்.

வைட்டமின் ‘ஏ’ தலையில் உள்ள மயிரடிச் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் ‘ஈ’ தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவும். ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகளான கொழுப்பில்லா இறைச்சி, மீன்கள் மற்றும் இதர புரதச் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் முடி உதிர்தல் குறையும்.

கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதத்தை ஹேர் சீரம் அளிக்கிறது. அதனால் கூந்தலின் வேர்ப்பகுதி வலிமை அடைவதோடு முடி உதிர்வது குறையும். வெயில் காலத்தில் ப்ளோ ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதன் வெப்பமும் சூரிய கதிர்களின் வெப்பமும் சேர்ந்து முடிக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படுத்தி விடுகிறது.

இரவில் படுப்பதற்கு முன் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயை முடியில் தடவி மசாஜ் செய்தால் முடியின் வேர் கால்கள் நன்கு வலுப்பெறும். தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிவதாலும் ஆண்களுக்கு முடி உதிர்ந்து சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலை வரும்.

மிதமான ஷாம்புவால் தலைமுடியை கழுவி அலசினால், தலைச்சருமமும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி உதிர்வதும் குறையும். குளித்து முடித்ததும் முடி ஈரத்துடன் இருக்கும் போது, வழுவிலந்த நிலையில் இருக்கும். அதனால் ஈர முடியை சீவினால் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

பூண்டுச்சாறு, வெங்காயச்சாறு அல்லது இஞ்சிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் முடியை நன்கு அலச வேண்டும். இதை வாரம் முழுவதும் தொடர்ந்து செய்து வர நல்ல பயனை பெறலாம்.