உடலுக்கு மருந்தாகும் வாழைப்பூ.. பலரும் அறியாத மருத்துவ பயன்கள்

கோவில், வீடு, அலுவலகம், அரசு சார்பாக நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் அனைத்திலும் முகப்பில் வாழைமரத்தை கட்டுவது வழக்கம். இந்த வாழை மரம் போல் நாமும் அனைவருக்கும் பலவிதத்திலும் பயனுள்ளவராக வாழ வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். வாழை மரத்தின் இலைகள், தண்டுகள், பூக்கள், காய்கள், பழங்கள், நார்கள் என அனைத்துப் பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூ தனிப்பட்ட துவர்ப்பு சுவை மற்றும் மணம் கொண்டிருக்கிறது. இந்த துவர்ப்பு சுவையே இது மருந்தாகவும் அமைய காரணமாக இருக்கிறது. வாழைப்பூவில் வைட்டமின் ஏ, சி, இ போன்றவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான பொட்டாஷியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, செம்புச் சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம் போன்ற இப்பூவில் உள்ளன.

மேலும் இதில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் காணப்படுகின்றன. அதையடுத்து வாழைப்பூவால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், உடல் சோர்வு போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது. வாழைப்பூ சாற்றில் உள்ள எத்தனால் தொற்றுநோய் ஏற்படாமல் தடை செய்கிறது.

மேலும் காயங்களையும், தொற்று நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்து விரைந்து குணப்படுத்துகிறது. வாய் துர்நாற்றம் நீங்கவும், வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் உடனடியாக சீராகிவிடும். மலேரியாவை உண்டாக்கும் கிருமிகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வாழைப்பூவுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால், வயிற்றுக்கடுப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கிறது.

உடல் சூடாக இருப்பவர்கள், வாழைப்பூவுடன், பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து அதனுடன் சிறிது நெய் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். வயிறு கோளாறு உள்ள ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் கூட இதுதான் மருந்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: ஆரோக்கியமான பூண்டு ரசம் செய்வது எப்படி?