தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த ஒரு அணையாக பார்க்கப்படுவது இந்த கல்லணை. கரிகால் சோழன் என்ற முதல் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்ற சோழ மன்னனால் இந்த கல்லணை கட்டப்பட்டது.
சுமார் 1080 அடி நீளமும், 66 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்ட இந்த கல்லணை நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. வெறும் கல்லும், களிமண்ணையும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கும் மேல் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி இருப்பது மிகப்பெரிய அதிசயம்.
இப்படிப்பட்ட அதிசயத்தை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் கரிகால் சோழன் என்ற மன்னன் தனி ஒரு ஆளாய் எப்படி சாதித்தார் என்பதை இங்கு விரிவாக காண்போம்.
கரிகால் சோழன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு எப்போதும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாது என்பதற்காக பல திட்டங்களை செயல்படுத்தி திறமையாக ஆட்சி புரிந்து வந்தார். நாடெங்கும் பல சாதனைகளைப் படைத்த இந்த மன்னனுக்கும் மனதில் ஒரு மிகப்பெரிய குறை இருந்திருக்கிறது.
நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் சோழ நாட்டுக்கே வாழ்வாதாரமாக இருந்தது காவிரி நதி. குடகு மலையிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த நீர் மேட்டூர் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து வரும்போது பல இடங்களில் பாய்ந்து வரும் இந்த காவிரி விவசாயம் செழித்து வளர முக்கிய பங்கு வகிக்கிறது.
இப்படி பல நன்மைகளை இந்த காவிரி செய்தாலும் இதன் அளவுக்கு அதிகமான வேகம் சில தாழ்வான பகுதிகளில் வெள்ள பாதிப்புகளையும், கடுமையான சேதங்களையும் ஏற்படுத்தியது. இதை தடுப்பதற்காக கரிகால் சோழன் பல இடங்களில் ஏரி, குளங்களை வெட்டி பல முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் காவிரித்தாயின் வேகத்தை யாராலும் குறைக்க முடியாமல் போனது. இது கரிகால் சோழனுக்கு பெரிய சவாலாகவும் இருந்தது. ஆனால் மக்களை இந்த வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு காவிரியின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டு ஆகவேண்டும் என்ற சூழ்நிலையும் இருந்தது.
ஆனால் இது ஆண்டவனால் கூட நடத்த முடியாத ஒரு காரியம். அதனால்தான் அதற்கு முன்பு இருந்த பல அரசர்களும் இந்த முயற்சியை செய்து பார்க்காமல் இருந்தனர். ஆனால் கரிகால் சோழன் எப்படியும் அதை நடத்தியே தீரவேண்டும் என்று தீவிர முயற்சியில் இறங்கினார்.
அப்பொழுது அவர் கண்டுபிடித்த விஷயம் தான் மண் அரிமானம். அதிக எடை கொண்ட பொருளை தண்ணீரின் குறுக்கே போடும்போது மண் அரிமானத்தால் அது மண்ணுக்குள் புதையும் என்பதை கரிகால்சோழன் கண்டுபிடித்தார். அதன் மூலம் அணை கட்டவும் அவர் தீர்மானித்தார்.
அதன்படி மேட்டூரில் இருந்து வரும் காவிரி ஆறு கொள்ளிடம் வழியாக கிளை ஆறுகளாக தெரியும். இந்த இடத்தில்தான் கரிகால் சோழன் கல்லணையை கட்ட திட்டமிட்டார். அதன்படி கொள்ளிடத்திற்கு வரும் காவிரி ஆறு வடிகால் பாதை, பாசன பாதை என்று இரண்டாக பிரியும் படி அவர் திட்டம் வகுத்தார்.
அந்த பாசன பாதையின் வழியாக வரும் நீரானது விவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படும். அதேபோன்று வடிகால் வழியாக செல்லும் நீர் மக்களின் பயன்பாட்டிற்காக பயன்படும் என்று அவர் திட்டமிட்டார்.
அதன்படி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு பல டன் எடை கொண்ட கற்களை அவர் கொண்டு வந்தார். அதன் மூலம் நதியின் வேகத்திற்கு ஏற்ப எந்த பகுதியில் எவ்வளவு எடை கொண்ட கற்களை போட வேண்டும் என்ற ஒரு கணக்கையும் அவர் கூறுகிறார்.
மேலும் பாறைக் கற்களை ஒன்றன் மீது ஒன்று வைத்து அடுக்கும் போது அது ஒட்டிக் கொள்வதற்காக சிறந்த களிமண் பசையையும் அவர் உருவாக்குகிறார். இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டு கரிகால்சோழன் கல்லணையை திட்டமிட்டபடி வெற்றிகரமாக கட்டி முடித்தார்.
இதில் அனைவரும் வியக்கக்கூடிய ஒரே விஷயம் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அந்தப் பாறைகளும், களிமண் பசையும் எப்படி உறுதியோடு இருக்கிறது என்பதுதான். அந்த விஷயத்தில் கரிகால் சோழனின் அறிவைப் பார்த்து ஆங்கிலேயர்களே வியந்தனர்.
இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் இந்த கல்லணை நம் தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையில் திமிருடன் நிற்கிறது. இப்படி ஒரு மகத்தான சாதனையை செய்த கரிகால் சோழனுக்கு கல்லணையில் ஒரு மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் நாம் தமிழர்கள் என்று சொல்லி பெருமைப்படுவதை விட இப்படி எல்லாம் நம் தமிழர்கள் அறிவியலையே வியக்க வைத்துள்ளனர் என்பதை நினைத்து கர்வம் கொள்வோம்.