பொதுவாக நம் வீட்டு சமையல் அறைகளில் பல அத்தியாவசியமான பொருட்கள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒரு பொருள் மஞ்சள். வீட்டில் அனைவரும் கட்டாயம் வைத்திருக்கும் இந்த மஞ்சளில் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
இந்த மஞ்சள் சமையலுக்கு மட்டுமல்லாது சிறந்த வீட்டு வைத்தியம் ஆகவும் நமக்கு உதவுகிறது. இது சிறந்த கிருமி நாசினியாகவும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, காளான், அலர்ஜி போன்ற பல பிரச்சனைகளுக்கும் இது சிறந்த தீர்வை கொடுக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக நாம் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள பலரின் வீட்டிலும் இந்த மஞ்சளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதில் விட்டமின் ஏ, விட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கி இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் மனிதர்களைத் தாக்கும் பல்வேறு விதமான நோய்களுக்கும் இந்த மஞ்சள் சிறந்த தீர்வை கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த மஞ்சள் ஒரு அற்புதமான பொருள் ஆகும். மூட்டு தொடர்பான பல பிரச்சனைகள் மூத்த தலைமுறையினருக்கு இருக்கிறது. அது போல அஜீரண கோளாறு, மூச்சுக்குழல் அலர்ஜி போன்ற அனைத்திற்கும் இந்த மஞ்சள் உதவுகிறது.
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் புற்றுநோயிலிருந்து கூட நம்மை காப்பதற்கு இந்த மஞ்சள் உதவுகிறது.
கிராமப்புறங்களில் எல்லாம் யாருக்காவது அடி பட்டு விட்டால் உடனே இந்த மஞ்சளைதான் காயம்பட்ட இடத்தில் பூசுவார்கள். ஏனென்றால் இந்த மஞ்சள் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்து சீக்கிரம் ஆறுவதற்கு உதவும். அதே போன்று வீக்கமாக இருக்கும் இடத்தில் இந்த மஞ்சளை நீருடன் கலந்து கொதிக்க வைத்து பூசினால் ரத்தக்கட்டு, வீக்கம் போன்றவை மறையும்.
இது வீட்டு வைத்தியத்திற்கு மட்டுமல்லாமல் சருமத்திற்கும் ஏற்றது. சிலருக்கு சருமத்தில் அலர்ஜி ஏற்படும் அப்படி இருப்பவர்கள் இந்த மஞ்சளுடன் சிறிது தண்ணீர் கலந்து தேய்த்து வந்தால் தோல் அலர்ஜி, பருக்கள் போன்றவை மறையும்.
அதே போன்று மஞ்சள் தூளுடன் பால், ரோஸ் வாட்டர் போன்ற எந்த பொருட்களையும் கலக்கக் கூடாது. சுத்தமான மஞ்சளில் நீர் சேர்த்து பயன்படுத்துவது தான் அதிக பயனை கொடுக்கும், இல்லையென்றால் சருமத்தில் சில பக்க விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்.
மஞ்சள் தடவிய இடத்தை நன்றாக குளிர்ந்த நீர் விட்டு கழுவ வேண்டும். அரைகுறையாக கழுவுவதும் தவறு. மேலும் முகத்திற்கு மஞ்சள் பேக் நாம் பயன்படுத்தும் போது அன்று முழுவதும் சோப்பு பயன்படுத்த கூடாது. மஞ்சளை முகத்தில் தடவும் போது திட்டு திட்டாக இல்லாமல் சமமாக தடவ வேண்டும். இது போன்ற சில விஷயங்களை நாம் பின்பற்றி வந்தால் நம் முகம் மற்றும் சருமம் பள பளவென்று மாறும்.