அம்மியில சட்னியும் அரைக்கணும், ஐபோன் பற்றியும் தெரியனும்.. நவயுக குடும்பத் தலைவிகளின் பாடு

அந்த காலத்துல எல்லாம் குடும்பத் தலைவியாக இருந்த நம்ம அம்மாக்கள் வீட்டை சுத்தம் செய்வது, குழந்தைகளை கவனிப்பது போன்ற வேலைகளை செய்து வந்தனர். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இட்லி மிளகாய் பொடி, புளி சாதம் போன்றவற்றை கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

அப்படி பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அக்கம் பக்கமிருக்கும் பிள்ளைகளோடு சேர்ந்து சென்று விடுவார்கள். இதைத்தான் அன்றைய அம்மாக்கள் அனைவரும் செய்து வந்தனர். ஆனால் இப்போது இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு தலைக்கு மேலே ஏகப்பட்ட பொறுப்புகள் கொட்டிக் கிடக்கிறது.

அவர்களுக்கு அமெரிக்கா, இத்தாலி, சைனீஸ், நார்த் இந்தியன், பாஸ்ட் புட் போன்ற எல்லா வகைகளும் சமைக்க தெரியனும். அதோடு வீட்ல இருக்கிறவங்க எத்தனை பேர், எத்தனை விதமான உணவு கேட்டாலும் அதை சட்டுனு செஞ்சு கொடுக்கிற திறமையும் இருக்கனும்.

முக்கியமா வண்டி ஓட்ட கட்டாயம் தெரிஞ்சிருக்கணும். அப்பதான் குழந்தைகளை ஸ்கூல், யோகா கிளாஸ், டியூஷன், டான்ஸ் கிளாஸ் போன்ற எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போக முடியும். அதுமட்டுமில்லாம கணவருக்கு பிடித்த மாதிரி அம்மியில அரைச்சு குழம்பு வைக்க தெரியணும். முக்கியமா அம்மாவோட கைப்பக்குவத்தில் காரச் சட்னி அரைக்க தெரிஞ்சிருக்கணும்.

இது எல்லாத்தையும் விட ஒரு பெரிய விஷயம் என்னென்னா யாருக்குமே தெரியாத புரியாத விஷயங்களை நெட்ல பாத்து கண்டுபிடிச்சு குழந்தைகளுக்கு ப்ராஜக்ட் செய்ய தெரியணும். அந்த விதத்துல இன்றைய நவ நாகரீக குடும்பத் தலைவிகளுக்கு டெக்னாலஜியை பற்றி ஓரளவுக்கு இல்ல நல்லாவே தெரிந்திருக்கனும்.

நம்ம பத்தாவது படிச்ச கணக்க இப்ப 3வது படிக்கிற நம்ம பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். அதுவே பன்னிரண்டாவது படிக்கிற பிள்ளையா இருந்தா நீட் எக்ஸாம் எழுதுவது அல்லது வேறு எந்த கோர்ஸ் படிக்கணும்னு அனலைஸ் பண்ணி முடிவு எடுக்கத் தெரியனும்.

ஹஸ்பண்டுக்கு புடிச்ச மாதிரி மாடன் மனைவியாகவும், மாமனார், மாமியாரை பாத்துக்குற பொறுப்பான மருமகளாகவும் இருக்கணும். குடும்ப பிரச்சினைகளுக்கு சரியான ஆலோசனை தர்ற பி ஏ வாகவும் இருக்கணும், அடுப்படியில் வேலை செய்ற ஆயாவாகவும் இருக்கணும்.

நாட்டு நடப்பு பத்தி பேசணும், அதேசமயம் நாட்டு வைத்தியமும் தெரியணும். இப்படி சகல வேலைகளையும் செஞ்சாலும் சோர்வு மட்டும் நம்ம முகத்தில் காட்டாமல் எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிற வித்தையும் தெரியனும். வீட்ல இருக்கிற எல்லா வேலையையும் முடிசிட்டு அப்பாடான்னு போனை எடுத்து பார்க்கும்போது எப்ப பாரு இதே வேலை தான் அப்படி இல்லை திட்டுற கணவனின் பேச்சை கேட்குற பொறுமையும் வேண்டும்.

இப்படி நவயுக பெண்கள் ஒரு குடும்பத் தலைவியாய் இருக்கணும்ன்னா அவங்களுக்கு பின்னாடி 100 கை இருக்கனும். ஒரு நாளைக்கு பம்பரமாய் சுற்றி பல மல்டி டாஸ்க் பண்ணற இன்றைய குடும்ப தலைவிகளுக்கு நாமளும் ஒரு சல்யூட் வைக்கலாமே.

Comments are closed.