துப்பாக்கி சுடுவதிலும் கில்லாடி தான்.. பதக்கங்களை அள்ளிய அஜீத்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை அள்ளியது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திருச்சியில் 47வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற இந்த போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்றார்.

10 மீட்டர் 25 மீட்டர் 50 மீட்டர் என மூன்று பிரிவுகளிலும் மற்றும் பிஸ்டல் பிரிவு ஆகியவற்றிலும் இவர் கலந்து கொண்டார். இந்தப் போட்டிகளின் முடிவில் அஜித் நான்கு தங்க பதக்கங்களும், இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இப்படி ஆறு பதக்கங்களை அசால்டாக பெற்றிருக்கும் அஜித்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அஜித் கார், பைக் ரேஸ் உள்ளிட்டவைகளில் திறமையானவர். மேலும் கடந்த வருடம் அரசுக்கு ட்ரோன் விமானங்களை தயாரித்துக் காட்டி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அஜித் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார். அந்த வகையில் இவருடைய இந்த சாதனையை அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். நடிப்பு மட்டுமல்லாமல் பல கலைகளிலும் வல்லவராக திகழும் அஜித் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது. இதில் அஜித் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.