அமாவாசை தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முறைகள்.. கர்மவினைகளுக்கு செய்யும் பரிகாரம்

மாதத்திற்கு ஒருமுறை வரும் இந்த அமாவாசை தினம் நம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாளைத்தான் நாம் அமாவாசை தினமாக வழிபட்டு வருகிறோம்.

அன்றைய தினத்தில் நம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு உணவு படையலிட்டு ஆசி பெறுவதை நாம் வழக்கமாக பின்பற்றி வருகிறோம். இதன் மூலம் இறந்துபோன முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

பொதுவாக இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு மிகவும் எளிதில் ஆத்மசாந்தி கிடைத்துவிடும். ஆனால் துர்மரணம், கொடூர வியாதியினால் மரணித்தவர்களுக்கு இது போன்று எளிதில் ஆத்மசாந்தி கிடைப்பதில்லை.

அப்படி இறந்தவர்களின் ஆத்மா இந்த உலகில் நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும். அதனால்தான் அவர்களை அமைதிப்படுத்தி முக்தி பெறும் விதமாக நாம் அமாவாசை தினத்தில் அவர்களுக்காக படையலிட்டு திதி கொடுத்து வருகிறோம்.

இந்த அமாவாசை தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில முறைகள் இருக்கிறது. அவற்றை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக அமாவாசை நாட்களில் வீட்டு வாசலில் கோலம் போட மாட்டார்கள். இதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.

அதாவது இந்த அமாவாசை நாட்களில் பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் வீட்டில் கோலம் போடப்பட்டிருப்பதைப் பார்த்தால் நம்மை வழிபடவில்லை என்று நினைத்து திரும்பி சென்று விடுவார்கள். அதன் பிறகு நாம் எத்தனை முறை வழிபட்டாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது சாஸ்திரம்.

அதனால் எக்காரணம் கொண்டும் அன்றைய தினத்தில் நாம் வீட்டு வாசலில் கோலம் போடகூடாது. மேலும் அமாவாசை நாளன்று அதிகமான உடல் உழைப்பை கொடுக்கும் வேலைகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அந்த தினத்தில் நமக்கு ஏதாவது ரத்தக்காயம் ஏற்பட்டால் அது விரைவில் ஆறாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும் அமாவாசை தினத்தில் நமக்கு அதிகப்படியான கோபம், விரக்தி, எரிச்சல் போன்ற மன நிலை ஏற்படும். அதனால் முடிந்த வரையில் அன்று அமைதியாக இருப்பது நல்லது.

அதுமட்டுமல்லாமல் நம்மால் முடிந்த அளவு அமாவாசை தினத்தில் தானம், தர்மம் போன்ற விஷயங்களை செய்வது இன்னும் சிறப்பு. இதனால் நம் முன்னோர்கள் மனம் மகிழ்ந்து நமக்கு ஆசி வழங்குவார்கள். மேலும் இயற்கையாக மரணித்தவர்கள் வீட்டில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நிகழும்.

ஆனால் அகால மரணமடைந்தவர்களின் வீட்டில் சில சச்சரவுகள், மன அழுத்தங்கள், குழப்பங்கள் போன்றவை ஏற்படும். அதனால் இந்த அமாவாசை தினத்தில் பின்பற்ற வேண்டிய முறைகளை நாம் சரியாக பின்பற்றி வந்தால் நல்லது நடக்கும்.

மேலும் அது நம்முடைய கர்ம வினைகளுக்கான பரிகாரமாகவும் இருக்கும். அத்துடன் குழந்தையின்மை, கடன் தொல்லை, நீடித்த நோய் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நமக்கு முடிவு கிடைக்கும். இதனால் அமாவாசை தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.