பூஜை அறையில் நாம் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்.. இதை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்

பொதுவாக நம் வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் காலை எழுந்தவுடனே பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போதும் பல வீடுகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் பலரும் காலையில் பூஜை செய்வது கிடையாது.

இப்போதெல்லாம் நம் வசதிக்கேற்ப மாலை வேளைகளில் பூஜை செய்து வருகிறோம். அந்த வகையில் வாடகை வீடாக இருந்தாலும், சொந்த வீடாக இருந்தாலும் பூஜை அறை என்று ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பலரும் சிறு அலமாரியை பூஜை செய்வதற்காக ஒதுக்கி கொள்கின்றனர்.

தினந்தோறும் பூஜை செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நாம் பூஜை செய்யும் முறைகளையும், நம் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.

பொதுவாக பூஜை அறையில் பீங்கானால் செய்த சாமி சிலைகள் கட்டாயம் இருக்கக் கூடாது. அதன் மூலம் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. அதனால் உலோகங்களால் செய்யப்பட்ட சிலைகளை வாங்கி வழிபடுவது சிறந்தது.

அதேபோன்று பூஜை அறையில் வாசனை இல்லாத பூக்களைக் கொண்டு பூஜை செய்யக்கூடாது. மேலும் வாடிய பூக்களைக் கொண்டும் பூஜை செய்யக்கூடாது.

நாம் பூஜை செய்யும் இடம் எப்போதும் நல்ல வெளிச்சமாக இருப்பது முக்கியம். இருளான இடங்களில் சாமி படங்கள் இருக்கும்போது தெய்வம் வீட்டிற்குள் வராது என்பது சாஸ்திரம்.

மேலும் கீறல் விழுந்த சுவாமி படங்கள் மற்றும் உடைந்த சிலைகள் போன்றவை நம் பூஜை அறையில் இருக்கக் கூடாது. அதேபோன்று பூஜை அறையில் காலி எண்ணெய் பாட்டில் போன்ற தேவையற்ற எந்த பொருட்களும் இருக்கக் கூடாது.

மேலும் பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பூஜை அறையில் தான் இருக்க வேண்டும். வீட்டில் வேறு எந்த இடங்களிலும் அந்த பொருட்களை வைக்கக்கூடாது.

அதேபோன்று மாலை 6 மணிக்கு மேல் எந்த தர்ம காரியங்களையும் நாம் செய்யாமல் இருப்பது நல்லது. இதன் மூலம் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

மேற்கண்ட இந்த முறைகளை நாம் பின்பற்றி வந்தால் வீட்டில் தெய்வ கடாட்சம் நீடித்து இருக்கும்.