கருவளையத்தால் பொலிவிழந்து போகும் முகம்.. வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களைப் பெற சூப்பர் டிப்ஸ்

பொதுவாகவே பெண்கள் பலரும் அதிகமாக சந்திக்கக் கூடிய சில பிரச்சனைகளில் முக்கியமானது கருவளையம். போதுமான அளவு தூக்கம் இன்மை, அதிகபட்ச வேலைப்பளு போன்ற காரணங்களால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் உருவாகிறது.

ஒருவருக்கு இந்த கருவளையம் வந்து விட்டால் அவர்கள் முகமே பொலிவிழந்து வயதான தோற்றத்தை கொடுக்கும். இதனால் அவர்கள் மனரீதியாக சோர்வடைந்து விடுகின்றனர். இந்தப் பிரச்சனையை வீட்டிலேயே சரிசெய்து அழகான கண்களை பெறுவது எப்படி என்று இங்கு காண்போம்.

இந்த கருவளையத்தை சரிசெய்ய உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து அந்த சாற்றினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து அந்த சாற்றில் நனைத்து கருவளையம் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர இந்த பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

அதேபோன்று வாரத்திற்கு நான்கு நாட்கள் தக்காளி மற்றும் புதினா சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் கருவளையங்கள் நீங்கும். மேலும் இந்த தக்காளி சாற்றில் சிறிதளவு எலுமிச்சை சாற்றையும் கலந்து கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையங்கள் குறையும்.

அதுமட்டுமல்லாமல் பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை கருவளையம் உள்ள இடத்தில் தடவி பத்து முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தற்போது நம்மில் பலரும் இந்த முறையை பயன்படுத்துவது உண்டு. என்னவென்றால் வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி அதை கண்களின் மேல் வைத்து இருப்போம். இது ஓரளவிற்கு நல்ல பலனை கொடுத்தாலும் இந்த வெள்ளரிக்காய் உடன் இரண்டு ஸ்பூன் உளுந்தை ஊற வைத்து அரைத்து அதை கரு வளையத்தின் மேல் தடவ வேண்டும். இதன் மூலம் கரு வளைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

சிலருக்கு கண்கள் மிகவும் சோர்வடைந்து காணப்படும். அந்த சமயத்தில் புதினா இலையை நன்றாக அரைத்து, பேஸ்ட் போல் செய்து அதை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இந்த கருவளையம் வருவதற்கு முக்கிய காரணமே கண்களில் ஏற்படும் சோர்வு தான். இந்த புதினா இலை அதற்கு நல்ல தீர்வு கொடுக்கும்.

மேலும் கண்களில் அதிகப்படியான மேக் அப் செய்து விட்டு அதை கலைக்காமல் இரவில் படுக்கச் சொல்வது முற்றிலும் தவறு. இப்படி செய்யும் பட்சத்தில் கருவளையம் உருவாகிவிடும்.

அதனால் மேக்கப்பை முழுதுமாக அகற்றி விட்டு படுக்கச் செல்லுமுன் கண்களை சுற்றி சிறு துளி விளக்கெண்ணையை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேற்கூறிய இந்த முறைகளை நாம் பின்பற்றி வந்தால் கருவளையம் நீங்கி அழகான கண்களை பெற முடியும்.