காய்ச்சலை குணமாக்கும் மூலிகை கஷாயம்

காய்ச்சல் வருவதற்கு முன்பு சளி, இருமல், தொண்டை கமறல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தெரியும். ஆனால் அறிகுறி இல்லாமல் திடீரென வரக்கூடிய காய்ச்சலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துவிடுவோம். அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள்.

அதிலும் குழந்தைகளுக்கு வரும் போது பதட்டமும் சேர்ந்து வரக்கூடும். கொரோனா காலத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம் இருக்கும் போது திடீர் காய்ச்சலுக்கு முதலுதவி செய்யும் குறிப்புகளை தெரிந்துகொள்வதன் மூலம் உடல் வெப்பநிலை மேலும் அதிகமாகாமல் பார்த்துகொள்ள முடியும். காய்ச்சல் வந்தால் என்ன மூலிகை கஷாயம் குடிக்கலாம் என்று தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள் –

வெற்றிலை – 6,
கற்பூரவல்லி இலை – 6,
மிளகு – 5,
சீரகம் – 1 சிட்டிகை,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,

செய்முறை –

வெற்றிலை, கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும். கஷாயம் 1/2 கப் அளவிற்கு கொதித்து வந்ததும் இறக்கி வடித்து குடிக்க வேண்டும்.

இந்த கஷாயத்தை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகி, சளி, இருமல், தொண்டை வலி அனைத்தைம் போக்கி விடும்.