வரலட்சுமி விரதம் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள்!

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை, வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். வரலட்சுமி விரதத்தை கன்னி பெண்களும் மேற்கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்ள வேண்டிய முறைகள்:

எந்த பூஜை செய்வதாக இருந்தாலும் முதல் வணக்கமும், முதல் வழிபாடும் முதல்வன் விநாயகப் பெருமானுக்குத்தானே! எனவே, பிள்ளையாரை முதலில் வணங்கவேண்டும். ‘அப்பா, பிள்ளையாரப்பா இந்த வரலட்சுமி பூஜையை உன்னை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். நீதான் பூஜை நல்லபடியா நடக்க துணை இருக்கணும்’ என்று வேண்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். பூஜைக்கு அரணாக இருந்து அருளுவார் பிள்ளையாரப்பன்.

பெண்கள் தங்களுடைய இல்லங்களை சுத்தம் செய்து மாவிலைத் தோரணத்தில் வீட்டையும், பூஜை அறையையும் அலங்கரித்து, பூஜையறையில் கலசம் நிறுத்த வேண்டும்.

முடிந்தவர்கள் வெள்ளி அம்மன் முகம் வாங்கியும், முடியாதவர்கள் தேங்காய் கொண்டும் அம்மன் உருவம் செய்து, அம்மனுக்கு புடவை, நகைகள், பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து, நெய்வைத்தியங்கள் செய்து, மஞ்சள், குங்குமம், புடவை, துணி வைத்து, நெய் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.

கலசம் வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் பூஜை அறை நடுவீட்டில் மஞ்சளால் வட்டமாக மெழுகி அதில், குங்குமம் வைத்து அம்மனாக வரைந்து அதில், ஆவாஹனம் செய்வது வழக்கம். அம்பிகை அல்லது திருமகள் படம் அல்லது சிலை வைத்தும் பூஜிக்கலாம்.

பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி 108 நாமாவளிகள், அபிராமி அந்தாதி ஆகியவற்றை படிக்கலாம்.

அவ்வாறு, பூஜை செய்து முடித்தவுடன் உங்களால் முடிந்த சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், துணி வைத்து கொடுக்கலாம்.

இந்த விரதத்தை மனம் நிறைய விரிவாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் பெண்கள், தகுந்த குருக்களை வைத்து சம்பிரதாயப்படி, குறைந்தது 5 நாள்கள் விரதமிருந்து விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, சுமங்கலி பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, துர்காபூஜை, லட்சுமி அஷ்டோத்ரம், தோரக்ரந்தி பூஜை, மாங்கல்யப் பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்யலாம்.

வரலட்சுமி விரதத்தின் பலன்கள்:

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.

அன்னை மகாலஷ்மியை மகிழ்விக்கும் இந்த விரதமிருக்கும் பெண்மணி இவ்வுலகில் சகல போகங்களையும் பெற்று அனுபவித்த பின், வைகுந்தம் சேருவார் என்பது நம்பிக்கை.

கன்னிப் பெண்கள் இந்த விரதமிருந்து பூஜையில் கலந்து கொண்டால் நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணமாகும்.

வரலட்சுமி விரதம் புராணக் கதை:

வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் (அரம்பையர்) கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார் என்று கூறப்படுகிறது.

பூவுலகில் சௌராஷடிரா நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள்.

அதனால், மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள் என்றும் கூறப்படுகிறது.