மாத்திரை சாப்பிடுவதில் இவ்வளவு இருக்கா? இது தெரியாம போச்சே..

உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவரை அனுகும்போது, அவர் நமது உடல்நிலையை சரிபார்த்து அதன்பின் மாத்திரைகள் தருவது வழக்கம். தருகின்ற மாத்திரைகளை சில சமயங்களில் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்றும், சில சமயங்களில் சாப்பிடும் முன்பு சாப்பிடுங்கள் என்று மருத்துவர் கூறுவது இயல்பு. ஆனால், இந்த இயல்பில்தான் பிரச்சினையே!

ஆம், சில நேரங்களில் ஏன் சாப்பிட்ட பின் மாத்திரைகளை விழுங்க வேண்டும்? சில நேரங்களில் ஏன் சாப்பிடும் முன் மாத்திரைகளை சாப்பிட வேண்டும்? என்ற கேள்வி அவ்வப்போது நம்மிடத்திலேயே எழுகிறது.

அந்த கேள்விக்கான பதில்தான் இந்த கட்டுரை. மேற்கூறிய கேள்விகளுக்கான பதிலை தெரிந்துக் கொள்ளும் முன்பு நமது செரிமான அமைப்பை தெரிந்துக் கொள்வது அவசியமாகிறது.

நாம் உண்ணும் உணவானது உணவுக்குழாய் மூலமாக இரைப்பைக்குச் செல்கிறது. செல்லும் உணவானது இரப்பையினுள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் சில செரிமான நொதிகளுடன் சேர்ந்து, கூழ் போன்று மாற்றப்படுகிறது. பின்னர் இவை சிறுகுடலுக்குள் செலுத்தப்படும்.

செரிமான நொதிகளின் செயல்பாட்டின் மூலம் உணவானது செரிமானமடையும். உணவில் இருக்கும் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவை ரத்த நாளங்களுக்குள் கலந்து முழு ஆற்றலாக மாற்றமடைகிறது.

உணவிற்கு செரிமானம் எப்படி நிகழ்கிறதோ அதேபோலதான் மாத்திரைகளுக்கும். மாத்திரைகள் நன்கு செரித்து, ரத்தத்துடன் கலந்த பின்புதான் அவற்றின் பயன் நமக்குக் கிடைக்கும். ஆகவே, உணவு வயிற்றுக்குள் இருக்கும்போது மாத்திரை எளிதில் செரிமானம் அடையாது என்பதால், சில மாத்திரைகளை உணவுக்கு முன்பே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சில மாத்திரைகள் வயிற்றில் அல்சர், நெஞ்செரிச்சல் போன்றவற்றை உருவாக்கும் என்பதால் உணவுக்குப் பின்பு எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, வலி நிவாரணி, எதிர்ப்புச் சக்தி மருந்துகள் போன்றவற்றை கூறலாம்.

மாத்திரைகளை மருத்துவர்கள் எந்த நேரங்களில் சாப்பிட சொல்கிறார்களோ, அந்த நேரத்தில் சாப்பிடுவதே உடலுக்கு நன்மை பயக்கும்.