வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற உடை அணிகிறார்கள்?.. காரணமும், பின்னணியில் உள்ள வரலாறும்

சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளம் இருக்கும். ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு நிறத்தில் உடை இருக்கும். அந்த உடை கண்ணியம் மற்றும் தொழில்முறையின் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது.

உதாரணமாக மருத்துவர்கள் வெள்ளை நிற கோட், காவலர்கள் காக்கி நிற உடையும் அணிவார்கள். அதேபோன்று நீதிக்கு துணை நிற்கும் வழக்கறிஞர் மற்றும் நீதிபதி ஆகியவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடை அணிவது வழக்கம். அதற்குப் பின்னால் சில வரலாறுகளும் இருக்கிறது. அது என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிற உடை அணியும் பழக்கம் 13-ஆம் நூற்றாண்டில் இருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த கருப்பு நிறம் இரண்டு காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட சில நிறங்கள் மட்டுமே எளிதில் கிடைக்கும் படியாக இருந்தது.

அதில் ஊதா நிறம் அரசு குடும்பத்தை குறிக்கும் வகையில் இருந்தது. அதன் காரணமாகவே ஏராளமான துணிகளின் நிறம் கருப்பாகவே இருந்தது. அது மட்டுமல்லாமல் கருப்பு என்பது அதிகாரத்தை குறிக்கும் நிறம். அதனால் தான் நீதித்துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் அர்ப்பணிப்புக்காக இந்த நிறத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

மேலும் வெள்ளை நிறம் என்பது தூய்மை, நன்மை போன்றவற்றை குறிக்கிறது. இன்னும் சற்று எளிதாக சொல்லப்போனால் சாமானிய மக்களுக்கு நீதித்துறை ஒரு நம்பிக்கையை கொடுக்க கூடியது என்பதால் இந்த வெள்ளை நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வழக்கறிஞர்கள் கருப்பு நிற அங்கியை அணிந்து கொண்டு தான் வாதாடுவார்கள் இதற்கு பின்னரும் சில காரணங்கள் இருக்கிறது. இந்த கருப்பு நிறம் அங்கே வாதாடும் வழக்கறிஞர்களுக்கு ஒழுக்கம், அதிகாரம், நீதியை நிலைநாட்டும் உணர்வு ஆகியவற்றை தருகிறது.

மேலும் நீதியின் சின்னமே கண்ணியம் என்பதால் தான் கருப்பு நிற அங்கியை வழக்கறிஞர்கள் அணிந்து கொண்டு வாதாடுகின்றனர். இது மட்டுமல்லாமல் வழக்கறிஞர் கழுத்தில் வெள்ளை நிற பட்டையும் அணிவதை நாம் பார்த்திருப்போம்.

இந்த முறையை ஆங்கிலேயர்கள் தான் பின்பற்றி வந்தனர். காலப்போக்கில் ஆங்கிலேய ஆட்சியின் மாற்றத்திற்கு பிறகு அது அப்படியே இந்திய வழக்கறிஞர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. மொத்தத்தில் கருப்பு நிறம் என்பது நீதியை காப்பாற்றும் ஒரு நிறமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் நீதித்துறைக்கு கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது.