ஆரோக்கியம்  சமையல்

அடுப்பே இல்லாமல் செய்யும் ஆரோக்கியமான உணவுகள்.. சட்டுன்னு ஈசியா செய்யலாம்

பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நகரத்து வாழ்க்கையில் சமையல் என்பது எப்பவுமே அவசரமாக தான் நடந்து கொண்டிருக்கிறது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலையிலேயே காலை, மதியம் என்று சேர்த்து சமைத்து விடுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகள், கணவன் என்று அனைவரையும் தயார் செய்யும் இல்லத்தரசிகளுக்கும் இந்த வேலை உண்டு. அதனால் அவர்களின் காலை நேரம் எப்பவும் வேகமாகத் தான் இருக்கும். அந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு, சத்தான சாப்பாடு என்று அவர்களால் யோசித்து செய்ய முடியாது.

அவசர அவசரமாக ஏதோ ஒரு உணவை கட்டி எடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு இந்த டிப்ஸ் நிச்சயம் உபயோகமாக இருக்கும். இந்த உணவை செய்வதற்கு அடுப்பு தேவை ஏற்படாது. ஐந்து நிமிடத்தில் ஈஸியாக செய்யக்கூடிய சில உணவுகளை பற்றி இங்கு காண்போம்.

பேரிச்சம்பழம் லட்டு:

தேவையான பொருட்கள்:

பேரிச்சம்பழம் கால் கிலோ

முந்திரி பருப்பு 50 கிராம்

பாதாம் பருப்பு 50 கிராம்

எள்ளு சிறிதளவு

தேங்காய் துருவல் சிறிதளவு

செய்முறை:

பேரிச்சம் பழங்களை பொடிப் பொடியாக நறுக்கி ஒரு பௌலில் போடவும். பின்னர் முந்திரி, பாதாம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்.

பிறகு எள்ளு, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். இந்த லட்டு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

வெகு சுலபமாக செய்யும் இந்த லட்டுகளை நீங்கள் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் டைமில் கொடுக்கலாம்.

அவல் பிரைட் ரைஸ்:

தேவையான பொருட்கள்:

அவல் ஒரு கப்

முட்டைக்கோஸ் சிறிதளவு

கேரட் சிறிதளவு

உப்பு தேவையான அளவு

மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்

செய்முறை:

அவலை சிறிது நேரம் ஊற வைத்து பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், கேரட் ஆகியவற்றை சேர்க்கவும்.

பின்னர் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இப்பொழுது சுவையான அவல் பிரைட் ரைஸ் தயார்.

இது உடலுக்கு மிகவும் சத்தான ஆரோக்கியமான ஒரு உணவு.

அவல் புட்டு:

தேவையான பொருட்கள்:

அவல் ஒரு கப்

தேங்காய் துருவல் சிறிதளவு

நாட்டுச் சர்க்கரை கால் கப்

முந்திரிப்பருப்பு சிறிதளவு

செய்முறை:

அவளை சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் அதை நன்றாக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதனுடன் முந்திரி பருப்பு, நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இப்பொழுது நம் உடலுக்கு ஆரோக்கியமான அவல் புட்டு தயாராகிவிட்டது. இதை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

காய்கறி தயிர் பச்சடி:

தேவையான பொருட்கள்:

தயிர் ஒரு கப்

வெள்ளரிக்காய் 1

கேரட் ஒன்று

பச்சை மிளகாய் ஒன்று

சின்ன வெங்காயம் 10

தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

மல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

தயிரை ஒரு பௌலில் ஊற்றி அதனுடன் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், கேரட், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்க்கவும்.

பிறகு தேங்காய் துருவல், உப்பு, மல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இப்பொழுது வெயில் காலத்துக்கு ஏற்ற சூப்பரான காய்கறி தயிர் பச்சடி தயார் ஆகிவிட்டது. இதை நாம் சப்பாத்தி சாதம் போன்ற அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.