மூன்று முக்கிய நாடுகளை இணைக்கும் உலகின் மிக நீளமான ரயில் பயணம்!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து விளாடிவோஸ்டோக் நகர் வரை செல்கிறது டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை. இந்த டிரான்ஸ்-சைபீரியன் ரயில் பாதை 9,289 கிலோமீட்டர் தூரம் வரை அமைந்துள்ளது. உலகின் மிக நீளமான இந்த ஒரே பாதை ஐரோப்பிய ஆசிய கண்டங்களை இணைக்கிறது. ரயில் பிரயானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்த படியே, ஹெட்போனில் பாடல் கேட்டு செல்வது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.

அந்த வகையில், இந்த டிரான்ஸ்-சைபீரியன் ரயில் ரஷ்யாவின் மேற்கே தொடங்கி சீனாவின் எல்லை மற்றும் ஜப்பானின் எல்லையைத் தொடுகிறது. கோடை விடுமுறைகளின் போது, பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பயணம் செய்ய இந்த ரயில் பாதை பிரபலமாக இருக்கிறது. ஆண்டு முழுவதும் இந்த ரயில் செயல்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்தால் உலக வரைபடத்தில் பாதியைக் கடக்க முடியும்.

இந்த ரயிலைக் கட்டும் பணி 1891 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் எடுத்து 1916 இல் முடிவடைந்தது. இந்த ரயிலின் பங்கு உலக போக்குவரத்து வரலாற்றில் முக்கியமானது. 1094 ஆம் ஆண்டு ரஷ்யா ஜப்பான் இடையே நடந்த போருக்கு இந்த பாதை அமைக்கும் பணியும் முக்கிய காரணமாக அமைந்தது. மாஸ்கோவில் தொடங்கும் இந்த முழு பயணம் முடிவடைய முழுமையாக 7 நாட்களாகும்.

மாஸ்கோ – விளாடிவோஸ்டோக், மாஸ்கோ – உலன்படோர், மாஸ்கோ – பெய்ஜிங் என்று மூன்று பெரும் பிரிவுகளை இந்த ரயில் இணைக்கிறது. அதில் முதலில் எந்த வழியில் பயணம் செல்ல விரும்புகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கான விசாவை பெற விண்ணப்பிக்க வேண்டும். இந்த ரயிலில் ரஷ்யாவில் இருத்து தொடங்கி சீனா செல்ல வேண்டுமென்றால் ரஷ்யா, சீனா என இரண்டு நாட்டிற்கான விசாவையும் வாங்க வேண்டும். இதற்கான பயணச்சீட்டை மாஸ்கோவில் உள்ள ரயில் நிலையத்திலும் இணையம் வழியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டோக் வரை செல்ல 3 ஆம் வகுப்பு பயணச்சீட்டின் விலை 175 டாலர், தற்போதைய இந்திய மதிப்புப்படி ₹13,982. மேலும், 2 ஆம் வகுப்பு பயணச்சீட்டின் விலை 213 டாலர் தற்போதைய இந்திய மதிப்புப்படி ₹17018 ஆகும்.

மேலும், இந்த ரயிலில் குளிரூட்டி வசதி, உணவகம், படுக்கை, மின்சாரம், பார், இருக்கையில் தனியாக ஒலி அமைப்பு போன்றவை உள்ளது. மேலும், தனிப்பட்ட ஆடம்பர அறை போன்ற வசதியும் உள்ளது. இந்த டிரான்ஸ்-சைபீரியன் ரயில் 18 நிலையங்களை கடந்து 8 நேர மண்டலங்களை தாண்டி செல்கிறது. அதனால் பல இயற்கை அழகை இந்த பயணத்தில் காணமுடியும். மேலும், செர்பியன் பகுதியில் உள்ள பைக்கால் ஏரி மற்றும் மிக உயரமான புள்ளியான 1070 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள யப்லோனோவி பாஸ் போன்ற பல அழகிய இடங்களை கடந்து செல்கிறது.

குறைந்த விலையில் பெரிய பயணமாக உலகம் சுற்ற விரும்புவோருக்கு இந்த பயணம் மிகவும் விருப்பமானதாக அமையும். மூன்று முக்கிய நாடுகளை இணைத்து பல கலாச்சாரத்தையும், உணவையும், மொழியையும், இயற்கை அழகையும் இந்த பயணம் இணைக்கிறது.

Also read: மன மணக்கும் காரப்பொடி மீன் குழம்பு.. இதில் இவ்வளவு நன்மைகளா?