அதிகமாக அரிசி உணவை சாப்பிடுபவரா நீங்கள்.? கவனத்தில் எடுக்க வேண்டிய விஷயங்கள்

உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அரிசி உணவைத்தான் எடுத்துக் கொள்வதாக தேசிய உணவு கழக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் 90% மக்கள் அரிசி உணவையே விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில், தென்னிந்திய உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி உணவே.

அரிசி உணவில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பினும், தமிழகத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய அகநானூறு, தொல்காப்பியம் நூல்களில் சீரகசம்பா, குதிரைவாலி, மரநெல், கருப்பு கவுனி, தங்கச்சம்பா, வாடான் சம்பா, கலியன் சம்பா, புலிவெடிச்சான், வெள்ளைக்குருவை, கார், கல்லுருண்டை போன்ற அரிசியின் வகைகள் குறிப்பிடப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் பழனி அருகே உள்ள பொருந்தாள் என்ற ஊர்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், 2500 வருடங்களுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்ட அரிசி பெட்டகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த அரிசி, பூச்சி, வண்டு இல்லாமல் இன்று வரை கெட்டுப்போகாமல் இருப்பதைப் பார்த்து அகழ்வாராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல விவசாய நிபுணர்களுமே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அந்த அளவிற்கு நமது பண்டைய தமிழர்கள், விவசாயத்தில் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளைபொருட்களை விளைவித்து அறுவடை செய்திருக்கிறார்கள். தினமும் ஒரு வேளை அரிசி சாதம் உண்டால் உங்கள் உடலிற்கு நன்மை விளைவிக்கும். அதையடுத்து, அதிகமாக அரிசி உணவை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி காண்போம். அரிசியில் மற்ற தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை காட்டிலும் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது.

எனவே அரிசி உணவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது தேவையற்ற கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்கின்றது. இவ்வாறு சேரும் கொழுப்பினால் உடல் எடை அதிகரிக்கும். அரிசியானது அதிக அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உடையது. அதனால் உடலில் மாவுச்சத்தானது அதிக அளவில் சேர்ந்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. அரிசி உணவு சாப்பிடுவதால் எரிக்கப்படும் கலோரிகள் உடலில் கொழுப்பாக தங்குகின்றன.

அவ்வாறு சேரும் கொழுப்பானது இருதய இரத்த நாளங்களில் சேர்வதன் விளைவாக இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால் தினமும் ஒரு வகை சிறுதானியமாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவும் அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.