வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்த 90ஸ் கிட்ஸ்.. குறுகிய வட்டத்திற்குள் வாழும் இன்றைய தலைமுறை

அந்தக் காலத்தில் இருந்த சிறுவர்கள் அனைவரும் பள்ளி விட்டு வீடு திரும்பும் போது அவ்வளவு உற்சாகமாக வருவார்கள். அதற்கு காரணம் அவர்கள் வீடு திரும்பினதும், வீட்டில் பையை போட்டு விட்டு அவர்களின் நண்பர்களோடு விளையாடச் சென்று விடுவார்கள். நண்பர்களோடு சேர்ந்து நொங்கு வண்டி, பம்பரம் விடுதல், செய்தித்தாளில் பட்டம் செய்து பறக்கவிடுதல், கோழி குண்டு, கில்லி விளையாட்டு மற்றும் சைக்கிளின் டயரை வைத்து விளையாடுவார்கள்.

டயரின் கரை கையில் படிந்து விடும் என்பதற்காக கையில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு டயரை ஒட்டி உற்சாகமாக விளையாடுவார்கள். விளையாடி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் நன்றாக பசி எடுக்கும். சாப்பிட்டுவிட்டு நேரத்தோடு உறங்கி, நேரத்திற்கு விழித்து விடுவார்கள். அப்போது அவர்களுக்கு மன அழுத்தம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது.

ஏனென்றால் அப்போது அவர்களிடம் கைபேசி இல்லை, வீட்டில் முடங்கி இருக்கவில்லை. இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்க்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இன்றைய கால சிறுவர்கள் விவரம் தெரியாத வயதிலேயே மன அழுத்தம் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். அந்தக் காலத்தில் சிறுவர்கள் அனைவரும் ஒன்றுகூடி விளையாடுவார்கள்.

ஆனால் இன்றைய கால சிறுவர்கள் கையில் தொலைபேசி வந்ததும் பக்கத்தில் இருப்பவர்கள் கூட அவர்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு தொலைபேசியில் மூழ்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு உடலில் மட்டுமின்றி கண்களிலும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. அன்றைய காலத்தில் பிள்ளைகளுக்கு சோறு ஊட்ட வேண்டும் என்றால் வெளியில் பூனை, நாய், கோழி போன்றவற்றை காட்டிதான் தாய்மார்கள் சோறு ஊட்டுவார்கள்.

Also read: குழந்தைகள் விரும்பும் ஜில் ஜில் ஜிகர்தண்டா.. வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆனால் இன்றைய காலத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் என்றால் அவர்களின் கையில் தொலைபேசியை முதலில் கொடுத்து அவர்களின் கவனத்தை முழுவதுமாக தொலைபேசியில் வைத்த பின்னர்தான் அதிகமான தாய்மார்கள், பிள்ளைகளுக்கு சோறு ஊட்டுகின்றனர். அதனால் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே தொலைபேசியை உபயோகிப்பதால் வெளி மனிதர்களிடம் அதிகமாக பேசுவதில்லை.

அவ்வளவு ஏன் நெருங்கிய சொந்தங்கள் கூட அவர்களுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் வாழ்க்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே அமைந்துவிட்டது. இந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது கிராமப்புறங்களிலும் பரவி வருகிறது.

இதையெல்லாம் பார்க்கும் 90ஸ் தலைமுறை எங்கள் காலம் போல் வருமா என்று பெருமையாக கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் அந்த காலமும் எப்பொழுதும் நினைத்து அசைபோடும் அளவிற்கு ஏகாந்தமான காலமாகத்தான் இருந்திருக்கிறது.

இப்பொழுது வெயில், மழை என்றால் குழந்தைகளை வீட்டிற்குள்ளே அடைத்து வைத்து விடுகின்றனர். ஆனால் அப்பொழுது குழந்தைகள் முக்கால்வாசி நேரம் வெயிலிலும் மழையிலும் தான் ஆட்டம் போட்டார்கள்.

அதுவே அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்தது. இப்போது போன்று அப்போதெல்லாம் அடிக்கடி டாக்டரிடம் செல்லும் வழக்கமும் இல்லை. அந்த அளவுக்கு குழந்தைகள் திடகாத்திரமாகவே இருந்திருக்கிறார்கள்.

Also read: கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் குணங்கள்.. இதை ஃபாலோ பண்ணா உங்க வீட்ல சண்டையே வராது

இப்பொழுது இருக்கும் குழந்தைகள் பீட்சா, பர்கர் என்று கண்டதையும் சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் சிறுதானிய புட்டு, கடலை உருண்டை, தேன் மிட்டாய் போன்று உடலுக்கு சத்தான உணவுகளை தான் அவர்கள் சாப்பிட்டு வந்தனர்.

மேலும் உணவை பகிர்ந்து உண்பது, ஒற்றுமையாக விளையாடுவது என்று அவர்களின் வாழ்க்கை வசந்தகாலமாகத்தான் இருந்தது. அது மட்டும் அல்லாமல் பெரியவர்கள் கூட ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிப்பது, பெண்கள் பக்கத்து வீட்டில் கொஞ்சம் குழம்பு தாருங்கள் என்று உரிமையுடன் கேட்டு வாங்கியது எல்லாம் இப்போதைய நவநாகரிக பெண்களுக்கு தெரியாது.

அதனால்தான் அன்றைய காலம் இன்று வரை பெருமையாக பேசப்படுகிறது. எனவே பிள்ளைகளிடம் தொலைபேசி கொடுப்பதை தவிர்த்து விட்டு வெளியில் விளையாட அனுமதியுங்கள். உங்களின் கண்பார்வையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அவர்கள் மற்றவரிடம் பேசத் தொடங்குவார்கள். வீட்டிலேயே முடங்கி இருந்தாலோ அல்லது தொலைபேசியிலோ மூழ்கி இருந்தாலும், வெளி உலகத்தை கற்றுக் கொள்ள முடியாது. வெளியில் சென்று நாலு பேருடன் பேசினால் மட்டுமே வெளி உலகத்தை கற்றுக் கொள்ள முடியும்.

Also read: அக்கால ஆரோக்கியம், இன்றைய தலைமுறையிடம் இல்லாதது ஏன்.? ஓர் அலசல்

Comments are closed.