ஆரோக்கியம்  சமையல்

குழந்தைகள் விரும்பும் ஜில் ஜில் ஜிகர்தண்டா.. வீட்டிலேயே செய்வது எப்படி?

jigarthanda

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே வெயிலின் தாக்கம் மக்களை அதிக சோர்வடைய செய்யும். இதனால் அனைவரும் அந்த தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஜூஸ் பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.

அதேபோன்று நாம் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் ஜூஸ் போன்ற வகைகளை நாம் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதை விரும்புவதில்லை. அதற்கு மாறாக கடைகளில் கலர் கலராக கிடைக்கும் ஐஸ்கிரீம், குல்பி போன்றவற்றை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நாம் வீட்டிலேயே அவர்களுக்கு பிடித்தது போன்ற ரெசிபியை செய்து கொடுக்க முடியும். அதிலும் தற்போது குழந்தைகள் மதுரை பேமஸ் ஆன ஜிகர்தண்டாவை ஆர்வத்துடன் ரசித்து சாப்பிடுகின்றனர். மதுரை என்றாலே இந்த ஜிகர்தண்டா ரொம்பவும் பிரபலம்.

ஆனால் இப்பொழுது சென்னை, திருச்சி போன்ற அனைத்து நகரங்களிலும் இந்த ஜிகர்தண்டா கிடைக்க ஆரம்பித்துள்ளது. அதில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதை அதிக அளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். இதை நாம் வீட்டிலேயே எப்படி செய்வது என்று இப்போது காண்போம்.

தேவையான பொருட்கள்

பால் ஒரு லிட்டர்

சர்க்கரை ஒரு கப்

நன்னாரி சர்பத் 2 ஸ்பூன்

பாதாம் பிசின் தேவையான அளவு

செய்முறை

தேவையான அளவு பாதாம் பிசினை எடுத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் காலையில் பாதாம் பிசின் ஒரு ஜெல்லி போன்று அழகாக வந்து இருக்கும்.

அடுப்பில் கடாயை வைத்து அதில் அரை லிட்டர் அளவு பாலை ஊற்றி நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.

பால் நன்றாக சுண்டி வற்றி வரும் போது அது இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். பிறகு பால்கோவா போன்று இருக்கும் இதை ஒரு கப்பிற்கு மாற்ற வேண்டும்.

இந்த பால்கோவா ரொம்பவும் கெட்டியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் கடாயை வைத்து அதில் அரை கப் அளவு சர்க்கரையை போட்டு மிதமான சூட்டில் கலக்க வேண்டும்.

இந்த சர்க்கரை தேன் நிறத்திற்கு மாறியதும் சூடான தண்ணீரை சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பிறகு மீதமிருக்கும் அரை லிட்டர் பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் செய்து வைத்துள்ள சுகர் சிரப் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து விட வேண்டும்.

இப்போது இந்தப் பாலை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.

இப்போது ஜிகர்தண்டா செய்வதற்கு தேவையான ஐஸ்க்ரீமை தயார் செய்ய வேண்டும்.

அதற்கு நாம் ஏற்கனவே கப்பில் எடுத்து வைத்துள்ள பால்கோவாவை ஒரு காற்றுப்புகாத டப்பாவிற்கு மாற்ற வேண்டும். அதன் மேல் நாம் செய்து வைத்திருக்கும் சுகர் சிரப்பையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

இந்த கலவையை நாம் பிரிட்ஜில் ஆறு மணி நேரம் வைக்க வேண்டும். இப்போது ஜிகிர்தண்டாவுக்கு தேவையான ஐஸ்கிரீம் தயாராகிவிட்டது.

பிறகு ஒரு கிளாஸில் பாதாம் பிசின் சேர்த்து அதனுடன் தேவையான அளவு நன்னாரி சர்பத்தை சேர்க்க வேண்டும்.

அதன் மேல் செய்து வைத்துள்ள ஐஸ் கிரீமை போட்டு, எடுத்து வைத்துள்ள பாலை சேர்க்க வேண்டும்.

அதற்கு மேல் சிறிதளவு பாலடை, ஐஸ்கிரீம் எல்லாவற்றையும் சேர்த்தால் சுவையான ஜில்ஜில் ஜிகர்தண்டா தயார்.

இந்த ரெசிபியை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த ஜிகர்தண்டா குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்தமான ஒன்று.