ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு நாள் குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றாலும் இப்போது இருக்கும் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
பொதுவாக குழந்தை சாப்பாடு சாப்பிடுவதை விட ஆரோக்கியமாக சாப்பிடுவது தான் முக்கியம். இதனால் நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களை சேர்த்துக் கொடுக்க வேண்டும். அப்படி குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம்.
அவகோடா: இந்தப் பழத்தில் வைட்டமின்பி6 மற்றும் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. அதனால் இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். இந்த பழத்தை நாம் குழந்தைகளுக்கு சாலட் போன்று செய்து கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
வாழைப்பழம்: மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய பழம் தான் இந்த வாழைப்பழம். முக்கனிகளில் ஒன்றான இந்த பழத்தில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்றவை இருக்கின்றன. அதனால் வளரும் குழந்தைகளுக்கு இந்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஒல்லியாக இருக்கும் குழந்தைக்கு எடை அதிகரிக்கும்.
பருப்பு: பல குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதம் என்றால் அது பருப்பு சாதம் ஆகத்தான் இருக்க முடியும். பல குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகம் இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் எளிதாக செரிக்கக்கூடிய இந்த பருப்பு வகைகளை நாம் அதிகமாக உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குழந்தையின் உடல் எடை கூடும்.
முட்டை: குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இந்த முட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக் கொடுத்து வந்தால், அவர்களின் உடல் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். குழந்தைகள் முட்டை சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள். அப்படி இருப்பவர்களுக்கு இந்த முட்டையை அவர்களுக்கு பிடித்த ருசியில் மிளகுத்தூள், சீரகத்தூள் போன்றவை கலந்து கொடுக்கலாம். இது செரிமானத்திற்கும் உதவும்.
நெய்: நெய் பிடிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. நம் குழந்தைகளுக்கு பருப்பு சாதம் ஊட்டும் போது இந்த நெய்யை சிறிதளவு கலந்து ஊட்ட வேண்டும். இதன் மூலம் குழந்தையின் எடை அதிகரிக்கும், வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் நீங்கும்.
காய்கறிகள்: பல குழந்தைகளும் காய்கறிகள் சாப்பிடுவதற்கு அடம் பிடிக்கும். ஆனால் அந்த காய்கறிகளில் நம் உடலுக்கு தேவையான பல விஷயங்கள் இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு இந்த காய்கறிகளை நன்கு ஆவியில் வேக வைத்துக் கொடுப்பது சிறந்தது. இதன் மூலம் சத்துக்கள் குழந்தைகளுக்கு ஏராளமாகக் கிடைக்கும்.
இந்த உணவுகளை நாம் வளரும் குழந்தைகளுக்கு, அதாவது குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும் போதிலிருந்தே பழக்கப்படுத்தி வந்தால், பெரியவர்களான பிறகு அவர்கள் அடம் பிடிக்காமல் சாப்பிடுவார்கள்.
1 Comment