ஏன் புகைப்பிடிப்பதை எளிதில் விடமுடியவில்லை? அதன் பின்னிருக்கும் காரணம் என்ன?

மனிதன் போதையை பல்வேறு முறையில் எடுத்து கொள்கிறான். போதைப்பொருட்கள் இன்றி வாழவே முடியாது என்ற நிலையை மனிதன் அடைகிறான். சில முறை போதைப்பொருளை உட்கொண்டப்பின் அவன் போதைப்பொருள் எடுப்பதை நிறுத்த நினைத்தாலும் மனிதனால் பல சமயங்களில் அது முடிவதில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் புகைப்பிடிக்க ஆரம்பித்தப்பின்பு இனி புகைக்ககூடாது என்ற முடிவை மனிதன் எடுக்கிறான். ஆனால், அவனால் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை.

ஆண்டுதோறும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு புள்ளி விவரத்தில் 2030-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிப்பதால் வருடந்தோறும் என்பது லட்சம் நபர்கள் இறப்பர் என்று தெரியவந்துள்ளது. இப்படியான சூழல் நிலவ இன்னமும் பலர் புகைப்பிடிப்பதைத் தொடர்ந்து வருகின்றனர். பலர் புகைப்பிடிப்பதை கைவிட முயலுகின்றனர். ஆனால், அவர்களால் அது முடிவதில்லை.

ஏன் புகைப்பிடிப்பவர்களால் எளிதில் புகைப்பிடிப்பதை நிறுத்த முடியவில்லை என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்!

சிகரெட்டை பற்ற வைத்தவுடன் வெளியே வருகிற நிகோடின் என்ற ரசாயனம்தான் புகைப்பிடிப்பதை எளிதில் கைவிட முடியாமல் நம்மை ஆட்டிப்படைப்பது.

சிகரெட் புகையை உள்ளிழுக்கும் போது, நிகோட்டின் நுரையீரலின் பக்கங்களினால் மிக விரைவாக உறிஞ்சப்படுகிறது. பின்பு சில நொடிகளில் அது நேரடியாக மூளையைச் சென்றடைகிறது. மூளையில் நரம்பு செல்களுடன் இது தொடர்புக்கொள்கிறது.

இந்த தொடர்பின் காரணமாகவே டோபமைன் எனும் வேதிப்பொருள் வெளியே வருகிறது. மேலும், டோபமைன் மூளையில் உண்டானப்பின் மீண்டும் மீண்டும் நிகோடினை மூளை கேட்க ஆரம்பிக்கிறது. நீங்கள் அதை உணராவிட்டாலும், மூளை அதை மீண்டும் செய்யும்படி கேட்கிறது.

அதேபோல் அடிக்கடி சிகரெட் பற்ற வைத்த இடத்திற்கு மீண்டும் செல்லும்போதோ, அடிக்கடி சிகரெட் பிடித்த சூழல் நேரும்போதோ, “சிறப்பான” பொருள் தனக்குக் கிடைக்கப் போகிறது என்று மூளை நினைக்கும். ஆதலால், புகைப்பிடிக்க சொல்லி மூளை நிர்பந்திக்கும்.

சூழ்நிலைகளுக்கும் புகைபிடிக்கும் அவசியத்திற்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. அது புகைப்பிடிப்பதை நிறுத்தவிடாமல் மீண்டும் மீண்டும் செய்யத் தோன்றுகிறது.