குழந்தைகளை சோர்வடைய வைக்கும் காய்ச்சல்.. கட்டுப்படுத்த உதவும் சில மருத்துவ குறிப்புகள்

பொதுவாக நம் வீடுகளில் பெரியவர்களுக்கு காய்ச்சல் வந்துவிட்டாலே அதை தாங்க முடியாமல் அவதிப்படுவார்கள். அப்படி இருக்கும் போது சிறு குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் வந்தால் கேட்கவா வேண்டும். தனக்கு என்ன செய்கிறது என்று கூட சொல்ல தெரியாமல் அழுது அழுது சோர்வடைந்து விடுவார்கள்.

வீட்டில் பல பிரச்சினைகளை சமாளிக்கும் இல்லத்தரசிகளுக்கு குழந்தைகளின் உடலுக்கு ஏதாவது வந்துவிட்டால் வேலையே ஓடாது. இப்படி காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகளை உடனே மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு செல்வார்கள்.

ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் உம் உடலின் வெப்ப நிலையை கட்டுக்குள் கொண்டுவர உதவுகிறது. மிகவும் லேசான சூடு, சாதாரண ஜுரம் போன்ற பிரச்சனைகளுக்கு இந்த வைத்தியம் கைகொடுக்கும். அப்படி குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலை வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

உடலில் அதிக வெப்பம் ஏற்படும் போது நீர்ச்சத்து குறைந்து சருமத்தில் வறட்சி ஏற்படும். அதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களுக்கு சிறிது சிறிதாகத் தண்ணீரை அதிக அளவில் குடிக்க வைப்பது நல்லது.

இதன் மூலம் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் போது அந்த வெப்பம் குறையும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. இதுவே ஆறு மாதத்திற்கு கீழ் இருக்கும் குழந்தைகள் என்றால் அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது சிறந்தது.

அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பழச்சாறு, தண்ணீர் போன்றவற்றை தாராளமாக கொடுக்கலாம். அதுவும் தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் ஆரம்பிக்கும்போதே சிறிது தண்ணீரில் துளசி இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு அதை ஆறவைத்து கொடுக்க வேண்டும். இது காய்ச்சலை குணமாக்குவதற்கு சிறந்த மருந்தாகும்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மிருதுவான காட்டன் உடைகளை அணிவிக்க வேண்டும். உடல்சூடு சிறிது அதிகமாக இருக்கும் பட்சத்தில் தண்ணீரில் சுத்தமான துணியை நன்றாக பிழிந்து குழந்தையின் நெற்றி, அக்குள் போன்ற இடங்களில் சிறிது நேரத்திற்கு ஒரு முறை வைத்து வைத்து எடுக்க வேண்டும்.

இதன் மூலம் உடலில் இருக்கும் வெப்பம் மட்டுப்படும். உடல் சூடு குறையும் வரை இப்படி செய்து வந்தால் விரைவில் காய்ச்சல் அகலும். சில குழந்தைகளுக்கு ஜலதோஷம், காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது தைலத்தை அதிக அளவில் செய்து விடுவார்கள்.

அப்படி தேய்ப்பதால் உடல் சூடு அதிகரித்து இருமல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் அப்படி செய்யாமல் சிறிது தண்ணீரில் தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து கொடுத்தால் சளி மற்றும் காய்ச்சல் கட்டுக்குள் வரும்.

மேலும் தண்ணீரில் உலர் திராட்சைகளை நன்றாக ஊற வைத்து, அதை அரைத்து, பிழிந்து, சாறு எடுத்து குடிப்பதும் நல்லது. இது குழந்தைகளுக்கான காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சில வீட்டு வைத்தியங்கள் ஆகும்.

ஆனால் அப்படியும் குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்வது நல்லது.