ஞாபக மறதியால் ரொம்ப தொல்லையா?.. அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க

ஒரு குறிப்பிட்ட வயது வந்துவிட்டால் பலருக்கும் ஞாபகத் திறன் குறைந்துவிடும். அதிலும் தெரிந்த சில விஷயங்களே பலருக்கு மறந்துவிடும். பல வீடுகளிலும் அப்பா, தாத்தா அனைவரும் எடுத்த பொருளை எங்கு வைத்தோம் என்று மறந்துவிட்டு தேடுவார்கள்.

இப்படிப்பட்ட பிரச்சனை நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவும் உள்ளது. அதனால் நம் அன்றாட உணவுகளில் சில விஷயங்களை நாம் தொடர்ந்து பின்பற்றி வந்தாலே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம்.

ஆரோக்கியமான உணவு நம் மூளையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதற்கு பின்வரும் சில உணவுகளை நாம் தவறாது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதற்கு மீன் மிகுந்த உதவியாக இருக்கிறது. இதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க உதவுகிறது இதன் மூலம் நம் மனநிலை மகிழ்ச்சியாகவும், ஞாபக சக்தி அதிகமாகவும் இருக்கும்.

பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் ஞாபக சக்தி தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.

அசைவ உணவு பிரியர்கள் மட்டனை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் எலும்பு குழம்பு என்றால் பலருக்கும் பிடிக்கும். அந்த எலும்பில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் அமினோ அமிலங்கள் இருக்கின்றன இது மூளையின் செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கிறது. இதன் மூலம் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

அதேபோன்று கீரைகள், ப்ரோக்கோலி உள்ளிட்ட உணவுகளில் ஏகப்பட்ட விட்டமின்கள், மினரல்கள் இருக்கின்றன. இது உடலுக்கு ஆரோக்கியம் மட்டும் அல்லாது மூளைக்கும் மிகவும் நல்லது. இதன் மூலம் ஞாபக மறதிக்கு தீர்வு கிடைக்கிறது.

அதிக நார்ச்சத்து கொண்ட அவகேடா பழம் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது நம் ஞாபக சக்திக்கும் உதவியாக இருக்கிறது.

காபி பிடிக்காத மனிதர்களே இருக்க முடியாது. இப்போது காபி பல்வேறு வகைகளில் அதிக சுவைகளில் கிடைக்கிறது. அப்படிப்பட்ட இந்த காபியில் உள்ள காபின் என்ற வேதிப்பொருள் நமது கற்றல் திறன் மற்றும் விழிப்புணர்வு தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

அதேபோன்று முட்டையில் இருக்கும் விட்டமின் பி, போலிக் அமிலம் போன்றவை நம்முடைய ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தவும் இது உதவுகிறது.

பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகளை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் நமக்கு ஏற்படும் ஞாபக மறதி விரைவில் சரியாகும். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இதன் மூலம் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

மேலும் நம் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்திவரும் மஞ்சளுக்கும் நம் ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் இருக்கிறது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

மேற்கூறிய இந்த உணவுகளை நாம் நம் அன்றாட உணவுகளில் எடுத்துக்கொண்டு வந்தால் விரைவில் ஞாபக மறதி தொல்லையில் இருந்து நாம் விடுபடலாம்.