மலைகளின் இளவரசியான வால்பாறை.. கோடைக்கு ஏற்ற சிறந்த சுற்றுலாத்தலம்

பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே பலரும் ஏதாவது ஒரு மலை சார்ந்த குளிர் பிரதேசத்தை நோக்கி படையெடுப்பார்கள். இப்படி ஊட்டி, கொடைக்கானல் போன்ற எண்ணற்ற சுற்றுலாத் தளங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.

அதில் மலைகளின் இளவரசி என்றும் தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படும் வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் நம் கண்ணைக் கவரும் ஏகப்பட்ட இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 1193 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 ஹேர்பின் வளைவுகள் இருக்கின்றன. பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகும்.

இந்த வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை, பழனி, சாலக்குடி, சேலம் ஆகிய பல இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பயணிகளின் கூட்டம் எப்போதும் அதிகமாகவே காணப்படும்.

இங்கு காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களை கவரும் வகையிலும், மனதிற்கும் புத்துணர்ச்சியை தரும் வகையில் இருக்கின்றன. மேலும் இங்கு உள்ள தேயிலை எஸ்டேட்கள், நீர்வீழ்ச்சிகள், கோவில், சரணாலயம் என்று பல இடங்கள் சுற்றுலா பயணிகளை பெருமளவில் கவர்ந்து வருகிறது. ஆதலால் இந்த கோடைக்கு ஏற்ற சிறந்த சுற்றுலாத் தளங்களில் இந்த வால்பாறை முக்கிய பங்கு வகிக்கிறது.