முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா?.. அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

நம் முகம், சருமம் போன்றவை அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மில் பலரும் நிறைய மெனெக்கெட்டு பல விஷயங்களை செய்கிறோம். அதில் பாதி அளவு கூட நம் தலை முடியை பராமரிக்க நாம் செய்வது கிடையாது.

அதனால் தான் இப்பொழுது இளம் வயதினருக்கு கூட முடி கொட்ட ஆரம்பித்து விடுகிறது. இன்றைய இளம் தலைமுறைகள் பெரிதும் சந்திக்கும் பிரச்சினைகளில் இந்த தலைமுடி பிரச்சனையும் ஒன்று. சருமத்தில் உள்ள துளைகளை முறையான பராமரிப்பு செய்வது போன்று நம் தலைமுடியில் உள்ள முடி துளைகளையும் சரியாக பராமரிக்க வேண்டும்.

ஏனென்றால் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த முடி துளைகளில் ஏற்படும் பிரச்சினைகள்தான். அதன் மூலம் பொடுகு, அதிகப்படியான வறட்சி போன்றவை ஏற்படும். மேலும் சில ஆண்களுக்கு வழுக்கையும் ஏற்படும். இவை அனைத்தையும் வீட்டிலேயே சில வழிகளை வைத்து சரி செய்ய முடியும்.

தலைக்கு குளிக்கும் போது மிகவும் சூடான நீரில் குளிக்கக் கூடாது. ஏனென்றால் அந்த வெப்பம் முடித்துளைகளில் பிடித்து இருக்கும் முடிகளை வலுவிழக்கச் செய்யும். இதனால் முடி உதிர்தல் ஏற்படும். அதனால் நாம் தலைக்கு குளிக்கும் போது குளிர்ந்த நீரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ குளிக்கலாம்.

மேலும் குளித்த பிறகு கூந்தலை துடைக்கும் போது மிகவும் கவனமாக மென்மையாக துடைக்க வேண்டும். ஏனென்றால் கூந்தல் ஈரமாக இருக்கும் போது நாம் அழுத்தி துடைப்பத்தால் வலு இல்லாமல் முடி உதிரும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

நிறைய பேர் ஷாம்பு போட்டு குளிக்கும்போது கூந்தலை நன்கு அலசுவார்கள். ஆனால் ஸ்கால்ப்பை சரியாக அலச மாட்டார்கள். அப்படி செய்வதால் தலையில் அரிப்பு பொடுகு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனால் ஸ்கால்ப்பை நன்றாக தண்ணீர் ஊற்றி விரல்களால் அழுத்தி தேய்த்து சுத்தமாக அலச வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் தூசு, புகை இல்லாத இடங்களை நம்மால் பார்க்க முடிவதில்லை. அதனால் என்னதான் தலைக்கு நன்றாக எண்ணெய் தேய்த்தாலும் அந்த எண்ணெயை தலை உறிஞ்சாமல் அந்த அழுக்குகளே உறிஞ்சி விடுகின்றன. அதனால் முடிந்தவரை தலையை நன்றாக தேய்த்து குளித்து அழுக்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

மேலும் பெண்கள் தலைமுடியை சீவும்போது கூந்தலின் நுனி வரை நன்றாக அழுத்தி சீவ வேண்டும். இதன் மூலம் கூந்தலில் ஏற்படும் வெடிப்பு குறையும். அதுமட்டுமல்லாமல் தலைக்கு ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள், சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

அதிலும் சுத்தமான தேங்காயெண்ணெயில் கருவேப்பிலை, செம்பருத்தி இலை, மருதாணி இலை போன்றவற்றை நன்றாக காய வைத்து பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, அதை தேய்த்து வர முடி உதிர்வு முற்றிலும் நீங்கும்.