சமையல்

காரசாரமான நாட்டுக்கோழி மிளகு வறுவல்.. இந்த ரெசிபியை விரும்பாத ஆளே கிடையாது

பொதுவாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் சமைக்கும் உணவே தனி ருசியாக இருக்கும். அதிலும் அசைவ உணவுகளை அவர்கள் சமைக்கும் போது வாசனை ஊரையே மயக்கும். ஆனால் நகரத்தில் இருக்கும் மக்களால் இப்படி ரசித்து சமைக்க முடிவதில்லை.

பரபரப்பாக இயங்கி வரும் இந்த காலகட்டத்தில் நாம் அவசர கதியில் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல அசைவ விருந்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அதற்காக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் தங்கள் கணவன்மார்களுக்கு பிடித்தது போன்ற சுவையில் விதவிதமாக சமைத்து அசத்துவார்கள். ஆனால் அதை சாப்பிடும் கணவன்கள் எங்க அம்மாவின் கைபக்குவம் போல் இல்லை என்று ஒரு வார்த்தையில் முடித்து விடுவார்கள். இந்த நிகழ்வு பல வீட்டில் நடப்பது உண்டு.

அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் உபயோகமாக இருக்கும். கிராமத்து ஸ்டைலில் நல்ல காரசாரமான நாட்டுக்கோழி மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

நாட்டுக் கோழி அரை கிலோ

சின்ன வெங்காயம் 20

தக்காளி 2

தேங்காய் துருவல் 3 ஸ்பூன்

இஞ்சி 2 துண்டு

பூண்டு 10 பல்

மிளகு 4 ஸ்பூன்

சீரகம் ஒரு ஸ்பூன்

சோம்பு ஒரு ஸ்பூன்

கசகசா அரை ஸ்பூன்

மஞ்சள்தூள் தேவையான அளவு

வர மிளகாய் 5

தனியா 2 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

நல்லெண்ணெய் தேவையான அளவு

பட்டை 1

கிராம்பு 4

கருவேப்பிலை, மல்லித்தழை தேவையான அளவு

செய்முறை

வெட்டி வைத்துள்ள நாட்டுக்கோழியை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும்.

அதில் தாளிப்பதற்கு தேவையான பட்டை, கிராம்பு, சோம்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

Also read: அக்கால ஆரோக்கியம், இன்றைய தலைமுறையிடம் இல்லாதது ஏன்.? ஓர் அலசல்

அதனுடன் தக்காளியையும் சேர்த்து சிறிது வதங்கிய பின்னர் நாட்டுக் கோழியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

5 நிமிடங்கள் நன்றாக வதக்கிய பின்பு அத்துடன் இஞ்சி, பூண்டு அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

இந்த கலவையை நன்றாக வாசனை வரும் வரை வதக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் கொடுக்கப்பட்டுள்ள மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, வரமிளகாய், தனியா, தேங்காய் துருவல் போன்றவற்றை லேசாக வறுத்து, அரைத்து கொள்ளவும்.

நாட்டுக்கோழி நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து கிளறி விட வேண்டும். அத்துடன் தேவையான அளவு மஞ்சள்தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து வதக்கி பின்னர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றி கறி வெந்து வரும் போது, மிதமான சூட்டில் எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைக்க வேண்டும். கடைசியாக கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இறக்க வேண்டும்.

இந்த ரெசிபி சூடான சாதம், ரசம், தயிர், சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற அனைத்திற்கும் ஏற்ற வகையில் இருக்கும். அதிலும் நல்லெண்ணெய் சேர்த்து செய்த இந்த காரசாரமான நாட்டுக்கோழி வறுவல் நம் உடலுக்கு மிகவும் நல்லது.

இந்த ரெசிபி அன்றைய காலம் தொட்டே நம் கிராமங்களில் பாட்டியிலிருந்து அம்மாக்கள் வரை செய்து அசத்திய ஒன்று. இதை சாப்பிட்டு மயங்காத ஆட்களே கிடையாது என்று கூட சொல்லலாம். அசைவ பிரியர்களுக்கு இந்த ரெசிபியின் சுவை நாவை விட்டு நீங்காது. அந்த அளவுக்கு அனைவரையும் ரசித்து, ருசித்து சாப்பிட வைக்கும் இந்த நாட்டுகோழி மிளகு வறுவலை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.

Also read: சுவையான வெஜ் ஆம்லெட்.. சைவ பிரியர்களுக்கான சூப்பர் ரெசிபி