நாவல் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள்.. விதை கூட மருந்தாகும் அதிசயம்!

ஆற்றங்கரை, சாலை ஓரம் என பல இடங்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு மரம் தான் இந்த நாவல் மரம். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்ற பல சுவைகளையும் ஒன்றாக கொண்ட இந்த நாவல் பழம் பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கிறது.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அதிக அளவில் கிடைக்கும் இந்த பழத்தின் விதை, இலை, மரப்பட்டை, வேர், பழம் போன்ற அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது. மேலும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், மக்னீசியம், வைட்டமின் சி போன்ற ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது.

இந்த பழத்தை உண்பதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இந்த நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் சதை பிடிக்காமல் மெலிந்து காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தினமும் இந்த நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும். மேலும் இந்த நாவல் பழத்திற்கு வியர்வையை பெருக்கும் சக்தி உண்டு. அதனால் சரும நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பித்தம், உடல் சூடு போன்றவற்றை குறைத்து ஞாபக சக்தியை அதிகரிக்கவும் இந்த பழம் நமக்கு பெரிதும் உதவுகிறது. இந்த பழத்தை ஜூஸ் செய்து சாப்பிடுவதன் மூலம் நல்ல ஜீரணசக்தி கிடைக்கும் மற்றும் வாயுத் தொல்லையும் நீங்கும். இதில் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

தொடர்ச்சியாக இந்த நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தோம் என்றால் இதயம் வலுப்பெற்று மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் குடல், இரைப்பை போன்றவற்றையும் இது வலுவாக்கும். இதில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது.

நுரையீரல் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கும், சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் இது நிவர்த்தி செய்யும். குழந்தைகளுக்கு இந்த பழத்தை கொடுத்து வந்தால் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் அவர்களை கிட்ட கூட நெருங்காது.

மேலும் நாவல் பட்டையை தண்ணீரில் நன்றாகக் காய்ச்சி கசாயம் போல செய்து பருகி வந்தால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் அலர்ஜி போன்றவைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த நாவல் பழத்தின் விதையை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் என்று சாப்பிட்டு வந்தால் சுகர் பிரச்சினை கட்டுக்குள் வரும்.

மேலும் இந்த நாவல் இலைக்கு நம் பற்களை வலுவாக்கும் சக்தி இருக்கிறது. இந்த இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்த்து வந்தால் பற்களில் கிருமிகள் வராமல் ஈறுகளையும், பற்களையும் பலப்படுத்தும்.

இந்த இலைகள் பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பல பிரச்சினைகளுக்கு இதனால் தீர்வு கிடைக்கிறது. அப்படிப்பட்ட அற்புதம் நிறைந்த இந்த பழத்தை நாம் வேண்டாம் என்று ஒதுக்காமல் தினமும் சாப்பிட்டு வந்தால் இதுபோன்ற பல தொல்லைகளில் இருந்து நாம் விடுபட முடியும்.