நெஞ்சு எரிச்சலால் ரொம்ப தொல்லையா?.. உடனடி நிவாரணம் தரும் இஞ்சி

நம்மில் பலர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நெஞ்செரிச்சல். ரொம்ப வேகமாக நகரும் இந்த காலகட்டத்தில் நாம் அதிகமாக பாஸ்ட் புட் உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். அதனால் பலருக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் நோக்கி வருவதால் தான் இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இது சில பிரச்சினைகளுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். அதனால் இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண்பது நல்லது.

பொதுவாக இந்த நெஞ்சு எரிச்சல் உடல் பருமன், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக்கொள்வது, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது.

சிலருக்கு அடிக்கடி இந்த பிரச்சனை இருக்கும் என்றால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. இந்த பிரச்சனைக்கு சில வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதற்கு நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்த கூடிய இஞ்சி நமக்கு பெரிதும் உதவுகிறது.

இந்த இஞ்சியை நன்றாக இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். மேலும் நன்றாக பசியை தூண்டும். வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இந்த இஞ்சியுடன் சிறிது உப்பு, சீரகம் ஒன்றாக கலந்து அரைத்து சிறிது சுடுநீர் சேர்த்து குடித்து வந்தாலும் நெஞ்சு எரிச்சல் மட்டுப்படும். இதிலுள்ள காரத்தன்மை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

அதேபோன்று இந்த இஞ்சியை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் நாம் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்தப் பொடியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் தடவினால் ஜலதோஷம், தலை பாரம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

இன்றும் கூட பல வீடுகளில் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு இதுதான் சிறந்த வீட்டு வைத்தியம் ஆக இருக்கிறது. ஆனால் சிலருக்கு மரபு ரீதியாகக் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம். அதனால் இந்தப் பிரச்சனை அடிக்கடி ஏற்பட்டால் கொஞ்சமும் தயங்காமல் மருத்துவரை சந்திப்பது நல்லது.