குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான இட்லி மிளகாய் பொடி செய்வது எப்படி?

நாம் என்னதான் ஹோட்டல்களில் வாங்கி வித விதமான உணவு வகைகளை சாப்பிட்டாலும் வீட்டில் நாமே தயாரிக்கும் உணவுக்கு மதிப்பே தனிதான். அதுபோல் எத்தனை வகையான சைடிஷ் இருந்தாலும் காலை உணவிற்கு இட்லி மிளகாய்ப் பொடிக்கு ஈடு எதுவும் இல்லை. கடையில் வாங்காமல் வீட்டிலேயே நம் பாரம்பரிய முறைப்படி அரைத்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. இதன் சுவையும் கூட அனைவருக்கு பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:

வர மிளகாய் – 15
உளுந்து- ஒரு கப்
கடலைப் பருப்பு -2 டேபிள் ஸ்பூன்
மிளகு -ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் -ஒரு டேபிள் ஸ்பூன்
கொள்ளு – அரை கப்
பூண்டு – 10 பல்
கருவேப்பிலை -ஒரு கைப்பிடி அளவு
பெருங்காயம் -சிறிதளவு உப்பு தேவையான அளவு
எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் அடுப்பில் கடாயை வைத்து நன்கு சூடேற்றி கொள்ளவும். பிறகு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனித் தனியாக பொன் நிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதை நன்கு ஆற வைத்து அதன் பிறகு மிக்ஸியில் போட்டு ரொம்பவும் நைசாக ஆகாமல் சற்று சொர சொரப்பாக வரும் வரை அரைத்துக் கொள்ளவும். நைசாக இருப்பதை விட சற்று சொர சொரப்பாக இருந்தால் அதன் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.

அதை ஒரு பவுலுக்கு மாற்றி ஆற வைத்து பின்பு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடி இட்லி மற்றும் தோசைக்கு மட்டு மல்லாது, சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். தற்பொழுது கடைகளில் விற்கும் கலப்பட பொடிகளில் சுவையும் இல்லை நமது உடல் நலத்திற்கும் நல்லது இல்லை.

அதற்கு நாமே நமது வீட்டில் இந்த இட்லி பொடியை மிக சுலபமாக தயாரித்து வைத்து கொள்ளலாம்.

மேலும் இட்லி பொடிகளிலே நிறைய வகைகள் இருக்கின்றன செட்டிநாடு இட்லி பொடி, ஆந்திரா இட்லி பொடி என்று அவற்றை நாம் அடுத்த இடுகையில் பார்க்கலாம்.