பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா.. நமக்கு தெரியாத விஷயங்கள்

பொதுவாக நம் வீடுகளில் சாதம் மீதம் ஆகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்திருந்து மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. இதை நம் முன்னோர்கள் அன்றைய காலம் தொட்டே பின்பற்றி வருகிறார்கள். முக்கியமாக கிராமங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் தான் இட்லி போன்ற உணவுகளை நம் கண்களால் பார்க்க முடியும். மற்ற நாட்கள் அனைத்திலும் அவர்கள் இந்த பழைய உணவை தான் சாப்பிடுவார்கள் அதனால் தான் நம் முன்னோர்களாகிய நம் தாத்தா, பாட்டிகள் 90 வயதைத் தாண்டியும் திடமுடன் இருந்தார்கள்.

இப்பழக்கம் குறித்து சித்தர்களும் பல கருத்துக்களை அப்போதே கூறியிருக்கிறார்கள். இப்போது துரித உணவுகள் அதிகமாக பரவி வரும் கால கட்டத்தில் நம் உடல் பல அசௌகரியங்களை சந்தித்து வருகிறது. உதாரணமாக வேலைக்கு செல்லும் நபர்கள் காலை வேளையில் கிடைத்த உணவை அவசர அவசரமாக சாப்பிடுவது அல்லது ரோட்டுக்கடை, கேன்டீன், ஹோட்டல் என்று ஏதாவது ஒரு இடத்தில் தாங்கள் நினைத்த உணவை சாப்பிடுகின்றனர்.

இதுபோன்ற உணவுகளால் அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை போன்ற பல உபாதைகள் ஏற்படுகிறது. அதிலும் கடைகளில் சமைக்கும் உணவு பதார்த்தங்களில் சுவை கூடுவதற்காக நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சில பொருட்களும் சேர்க்கப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நாம் மருத்துவரை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். அங்கு கொடுக்கப்படும் மருந்துகளும் சில நாட்கள் தீர்வை தருகிறதே ஒழிய முற்றிலுமாக நம் உடலை அதிலிருந்து பாதுகாப்பதில்லை.

இது போன்ற தொல்லையில் இருந்து நாம் விடுபடுவதற்கு இந்த பழைய சோறு சிறந்த மருந்தாக இருக்கிறது. இப்பவும் கூட கிராமத்து மனிதர்கள் இந்த உணவைத்தான் காலை உணவாக மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். அது மட்டுமல்லாமல் வயல் வேலைகளுக்கு செல்லும் மக்கள் அனைவரும் இதைத் தான் மதிய உணவாகவும் கூட எடுத்துக் கொள்கின்றனர்.

இது போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதால் தான் அவர்களை எந்த நோயும் அவ்வளவு சீக்கிரம் நெருங்குவது கிடையாது. மேலும் இந்த உணவை சாப்பிடுவதன் மூலம் வாதம், பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் வறட்சிகள் நீங்கும். அது மட்டுமல்லாமல் சருமத்தின் அழகும் மேம்படும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தற்போது சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கூட இந்த உணவை ஹோட்டலிலேயே விற்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் வெளிநாடுகளில் சொல்லவே தேவை இல்லை இந்த பழைய உணவுக்கு அங்கு ஏகப்பட்ட மவுசு இருக்கிறது. மாங்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவாடு போன்ற வித விதமான சைட் டிஷ்கள் கொண்டு இந்த உணவுகள் ஹோட்டலில் விற்கப்படுகிறது. இவ்வளவு ஆரோக்கியம் இருக்கும் இந்த உணவை இனியாவது நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

மேலும் இந்த முறையை நாம் பின் பற்றுவது மட்டுமல்லாமல் நம்முடைய குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து தலை முறைகளுக்கும் சொல்லி வளர்க்க வேண்டும். இதில் இருக்கும் நன்மைகளை நாம் சொல்லிக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளும் இந்த உணவை விரும்பி சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். இதனால் நம் கலாச்சாரமும், பாரம்பரியமும் அடுத்த  தலைமுறைகள் வரை நீடித்து நின்று நம் தமிழரின் பெருமையை பறை சாற்றும். நமது தமிழரின் பாரம்பரிய உணவான இதை அழிந்து விடாமல் பாதுகாப்பது கூட நமது ஒவ்வொருவரின் கடமையாகும்.