நிறைமாத நிலவே வா வா!.. கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும்

பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் சவாலான ஒரு விஷயத்தை எதிர் கொள்கிறார்கள் என்றால் அது நிச்சயம் அவர்களின் கர்ப்பக்காலமாகத்தான் இருக்க முடியும். அனைத்து பெண்களுக்கும் அது கிட்டத்தட்ட மறுஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு குழந்தையை இந்த பூமிக்கு கொண்டு வருவதில் பெண்கள் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஹார்மோன் மாற்றத்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் பலவிதமான குறைபாடுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறும் சூழ்நிலையும் ஏற்படும்.

ஆனால் இதை நினைத்து யாரும் பயப்படத் தேவை இல்லை. இது இயல்பான ஒன்று தான். உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமான பெண்களே இந்த விஷயத்தில் சற்று பயந்து தான் போகிறார்கள். அப்படி இருக்கும் போது சற்று பலவீனமான பெண்கள் கருவுற்ற காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்துப் போய் விடுவார்கள்.

அப்படிப்பட்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும் அதற்கான தீர்வுகளை பற்றியும் இங்கு காண்போம். கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் சில பிரச்சினைகள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது கிடையாது. அனைவருக்கும் பிரசவ நேரத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் தான்.

கர்ப்பமடைந்த பெண்கள் காலை நேரத்தில் சொல்ல முடியாத சங்கடத்தை அனுபவிப்பார்கள். அதை அனுபவிக்காத பெண்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 100 பேரில் கிட்டத்தட்ட 99 பேருக்கு இந்த பிரச்சனை இருப்பது சகஜம்.

கருவுற்ற 3 அல்லது 4 வாரங்களில் சில பெண்களுக்கு காலை நேரத்தில் கடுமையான வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

சில பெண்களுக்கு எழுந்து நிற்க முடியாத அளவுக்கு உடல் பலவீனமாக இருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது. அதிகப்படியான வாந்தி எடுக்கும்போது உடலில் நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு சோர்வு அதிகமாகும்.

அதனால் அவ்வப்போது ஜூஸ், பழங்கள், சூப் போன்ற சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும் சில பெண்கள் சிறிது சாப்பிட்டாலே அந்த உணவு செரிக்காமல் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அந்த சமயத்தில் பெண்கள் வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது குடிக்க வேண்டும். உணவை ஒரே நேரத்தில் சாப்பிடாமல் சிறிது சிறிதாக சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் உணவுகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் மார்பை சுற்றியும், நடுப்பகுதியிலும் ஏற்படும் எரிச்சல் போன்ற உணர்வை தடுக்க முடியும்.

உடலில் வழக்கத்தைவிட அதிகமான திரவங்கள் இருக்கும்போது கால் பாதங்கள் போன்றவற்றில் வீக்கம் ஏற்படும். இது கர்ப்பம் தரித்த எல்லா பெண்களுக்கும் நடப்பது உண்டு. இதுபோன்ற சமயத்தில் பெண்கள் சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைக்காமல் அவ்வப்போது வெளியேற்றிவிட வேண்டும்.

வெதுவெதுப்பான நீரை வைத்து கால்களுக்கு ஒத்தடம் கொடுப்பது நல்லது. அவர்களுக்கு அந்த வீக்கம் குறையவில்லை என்றால் இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் வைத்திருக்காமல் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது.

கர்ப்ப காலத்தில் தவிர்க்க முடியாத மற்றொரு பிரச்சினை முதுகு வலி. குழந்தை வளரத் தொடங்கும் போது முதுகெலும்புகளில் அதிக சிரமம் ஏற்படும். வயிறு பெரிதாக மாறும் போது இந்த முதுகு வலி இன்னும் கூடுதலாகும். அதுமட்டுமல்லாமல் தூங்கும் போது பல அசௌகரியங்கள் ஏற்படும்.

அந்த சமயத்தில் பெண்கள் முதுகு பக்கம் தலையணையை வைத்து படுக்கலாம். மிதமான உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனையின் பெயரில் உணவு பழக்கம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். உட்காரும் போதும் கூட முதுகுக்குப் பின்னால் தலையணை வைத்து சிறிது சாய்ந்தவாறு உட்காரலாம். இப்படி செய்வதன் மூலம் முதுகு வலியை தடுக்க முடியும்.

மேலும் மலச் சிக்கலை சந்திக்கும் கர்ப்பிணி பெண்கள் அந்த சமயத்தில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள், பீன்ஸ் வகைகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

இதுபோன்ற உணவு பழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தாலே இந்த கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல சவால்களை நம்மால் சமாளிக்க முடியும். அந்த பிரச்சனைகள் அனைத்தும் நம்மால் கட்டுக்குள் கொண்டு வரக் கூடியவை தான்.

அதனால் கர்ப்பம் தரித்த பெண்கள் மனதளவில் இருக்கும் பயத்தை விடுத்து ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு தங்கள் உடல் நலத்தையும், குழந்தையையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.