தை அமாவாசையின் சிறப்புகளும், பலன்களும்

அமாவாசை என்பது மாதம் தோறும் ஒரு முறை வருகிறது. அந்த நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபட்டு வருவது மிகவும் சிறப்புடையது. அதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாலயா அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது.

இதன் மூலம் முன்னோர்களின் ஆசை நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் சஞ்சலம், வறுமை ஆகியவற்றும் நீங்கும். அதனாலேயே தமிழர்கள் இறந்து போன வம்சாவளி முன்னோர்களை நினைத்து அமாவாசை தினத்தில் வழிபட்டு வருகின்றனர்.

ஏனென்றால் முன்னோர்களின் மனம் நிறைந்து கிடைக்கும் ஆசீர்வாதம் தான் எதிர்கால சந்ததியினருக்கு அவசியம். அப்படி நாம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் ஆகியவை கொடுப்பதை தவிர்த்து விட்டால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அக்குடும்பத்தில் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் என்ற ஒரு கருத்தும் உண்டு.

Also read: அமாவாசை தினத்தில் நாம் பின்பற்ற வேண்டிய முறைகள்.. கர்மவினைகளுக்கு செய்யும் பரிகாரம்

அந்த வகையில் இன்று தை அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு படையல் இட்டு வணங்க வேண்டும். மேலும் நீர்நிலைகளுக்கு அருகில் எள்ளு தண்ணீர் ஊற்றுவது, மாடுகளுக்கு உணவு, கீரை கொடுப்பது இன்னும் பலன் கொடுக்கும்.

வருடத்திற்கு ஒரு முறை முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள் இந்த தை அமாவாசை நாளில் கொடுக்கலாம். இந்த அமாவாசை விரதத்தை தாய் தந்தை இல்லாத ஆண்கள், கணவன் இல்லாத பெண்கள் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஒரு வருடம் முழுவதும் விரதம் இருந்து முன்னோர் வழிபாடு செய்த புண்ணியம் அவர்களுக்கு கிட்டும். அதனால் இந்த அமாவாசை தினத்தை முன்னோர்களுக்கு பிடித்த வகையில் படையல் இட்டு வழிபட்டு பலன் பெறுவோம்.

Also read: குழந்தைகளை சோர்வடைய வைக்கும் காய்ச்சல்.. கட்டுப்படுத்த உதவும் சில மருத்துவ குறிப்புகள்