பொதுவாக சீசனுக்கு ஏற்றவாறு நம் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம் அதிலும் கோடைக்காலத்தில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டு சருமம் பாதிப்படைகிறது.
இதன் மூலம் சருமத்தில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த சரும பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் பின்வரும் சில முறைகளை நாம் பின்பற்றலாம்.
அவ்வாறு நம் சரும அழகை பாதுகாக்க கடைகளில் விற்கும் ரசாயன பொருட்களை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம்முடைய அழகை நம்மால் பாதுகாக்க முடியும். அதற்கு மிக எளிதில் கிடைக்கக்கூடிய கற்றாலை நமக்கு பெரிதும் உதவுகிறது.
இதன் மூலம் நம் சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும். பெரும்பாலான வீடுகளில் இந்த முறையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இளம் பெண்களுக்கு இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கற்றாழை ஜெல்லை பேஸ்ட் போல் அரைத்து அத்துடன் தேன், மஞ்சள்தூள், சிறிதளவு பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை நம் முகம், கழுத்து, கை, கால் போன்ற இடங்களில் தடவி நன்றாக காய விட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வர நம்முடைய சருமம் பட்டுபோல் மிளிரும்.
தற்போது பெரும்பாலான மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று வெயிலினால் ஏற்படும் கருமை. அந்த கருமையை போக்க கற்றாழை ஜெல் நமக்கு உதவுகிறது.
கற்றாழை ஜெல்லில் சிறிதளவு தக்காளி சாறு கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி ஊற வைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் அதை கழுவி வர நல்ல மாற்றம் தெரியும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
கற்றாழை ஜெல்லுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து அதை தினமும் முகத்தில் தடவி கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
சிலருக்கு சருமம் மிகவும் சென்சிட்டிவ் ஆக இருக்கும். அப்படி இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காய் சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
சிலருக்கு சருமம் சொரசொரப்பாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் இந்த கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காய் சாறு, ஓட்ஸ் ஆகியவற்றை நன்றாக கலந்து கெட்டியாக பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
இதை முகம், உடல் ஆகியவற்றில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் பளபளப்பாகவும் மாறும்.
மேற்கண்ட இந்த முறைகளை நாம் நேரம் கிடைக்கும்போது பயன்படுத்தி வந்தால் பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.