பொடுகு பிரச்சனையால் தொல்லையா.. இயற்கையான முறையில் சூப்பர் டிப்ஸ்

பொடுகு பிரச்சனை சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வருகிறது. என்ன தான், நாம் அதற்கான ஷாம்பு உளிட்டவற்றை பயன்படுத்தினாலும், அவை எல்லாம் சிறிது காலம் மட்டுமே. மீண்டும் ஒட்டிக் கொண்டு வந்துவிடுகிறது.

சிலருக்கு ஷாம்பு, தண்ணீர், சீப்பு போன்றவற்றை மாற்றி பயன்படுத்தினால் வரக்கூடும். அதோடு, இந்தக் காலங்களில் வரும் ஷாம்புக்களில் அதிக இரசாயனம் உள்ளிட்டவை இருப்பதால், அவை சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை.

இயந்திர உலகில், வேலையில் மட்டுமே இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். தன்னையும் தனது உடலையும் பார்த்துக் கொள்ள மறந்துவிடுகிறார்கள்.

பொடுகு வராமல் எப்படி தடுக்கலாம் எவ்வாறு தடுக்கலாம் என்பனவற்றை இங்கே காணலாம்.

பொடுகு தொல்லையை போக்குவதில், செம்பருத்தி இலையும் பூவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், ஏதேனும் ஒன்றை எடுத்து கொள்ள வேண்டும்.

6 அல்லது உங்கள் தலைக்கு ஏற்றவாறு பூக்கள் எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பதமாக வேண்டுமென்றால், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்துக் கொள்ளலாம். அரைத்த விழுதுடன் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி குழைத்து, உச்சம் தலையிலும் முடியின் அடிப் பகுதியிலும் தேய்க்க வேண்டும். ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு தலையை அலச வேண்டும்.

இலைகளாக இருந்தால் 15 முதல் 20 இலைகளை மைய அரைத்து உச்சம் தலையிலும் தலைமுடி முழுவதும் எண்ணெய் விட்டு தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து பின்பு, அலசி எடுக்க வேண்டும்.

செம்பருத்தியில் வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளிட்ட சத்துகள் இருப்பதால், பொடுகினை நீக்க உதவுகிறது.

வெந்தயம் மூன்று தேக்கரண்டி, தயிர் இரண்டு தேக்கரண்டி, பொடியாக நெல்லிக்காய் இரண்டு கருவேப்பிலை ஒரு கைப்பிடி போன்றவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து, விழுதை உச்சம் தலையிலும் முடியின் அடிப்பகுதியிலும் தடவி, ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு முடியை வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும்.

முட்டை ஒன்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யும் சேர்த்து நன்றாக கலக்கி உச்சம் தலையிலும் தலை முடியின் அடிப்பகுதியிலும் தடவ வேண்டும். 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிட்டு, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும். அப்போதான், முட்டையின் வாடை போகும்.

முட்டையில் அதிக புரதம் இருப்பதால், தலைமுடிக்கு தடவுவது மிகவும் நல்லது. இப்படி செய்வதின் மூலம், பொடுகு தொல்லை நீங்குவதுடன், முடி வளரவும் உதவும்.

ஓட்ஸ் மூன்று மேசைக் கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன், பாலும் தேயிலையும் எண்ணெய்யும் சேர்த்து நன்றாக குழைத்து, உச்சம் தலையிலும் தலைமுடியிலும் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும்.

ஒரு மேசைக்கரண்டி வெள்ளை மிளகும் 200 முதல் 300 மில்லி லிட்டர் தேங்காய் பாலும் சேர்த்து கலந்து, முடியிலும் உச்சம் தலையிலும் நன்றாக தடவி தேய்த்து குளித்து வர வேண்டும். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு குளித்து வர பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும். இதுமட்டுமில்லாமல், இது கூந்தலை மென்மையாகவும் வாசனையாகவும் மாற்றும்.

சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துகுடி போன்ற பழங்களின் தோல்களை எடுத்து அதை பால் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மாதம் ஒருமுறையேனும் செய்து வர பொடுகு தொல்லை தீரும்.
மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கள் மற்றும் பழங்களில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது.

இயற்கையான வழிகளில் எந்தவிதமான பின்விளைவுகளும் இல்லை. இயற்கையான வழிமுறையில் தயார் செய்து பயன்படுத்தினால், நல்ல மாறுதல்களை காணலாம்.