அவல் ஓர் ஆரோக்கியமான காலை சிற்றுண்டி. மிதமான உணவு வகைகளை கொண்டு செய்ய ஏற்றது. அவல் என்பது நெல்லை ஊற வைத்த பின் இடித்து தட்டையாக செய்யப்பட்டு அதில் இருந்து உமியை நீக்கி பயன்படுத்தப்படுவது. அவல் முன்பு கைக்குத்தல் முறையில் தான் தயாரிக்கப்பட்டன. தற்போது மிஷின்கள் மூலம் சுலபமாக நல்ல மென்மையான தட்டையான அவல் கிடைக்கின்றது.
அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
தேவையானவை
அவல் – 400 கிராம்
பச்சரிசி – 400 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம் கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி மிளகாய் வற்றல் – 6
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – கால் கப் கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலை புடைத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரிசியை எடுத்து களைந்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்க வேண்டும்.முக்கால் பதம் அரைத்ததும் அலசிய அவலை போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை அரை மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
வாணலில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். அத்துடன் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அதை புளிக்க வைத்த மாவுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து குழிகளில் ஊற்றி வேகவிட வேண்டும்.
ஒரு புறம் லேசாக சிவக்க வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்க வேண்டும். இந்த பணியாரம் வெள்ளை நிறமாகத்தான் இருக்கும். நன்கு சிவக்க விடக்கூடாது. தேங்காய் சட்னி, காரச் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அதுமட்டுமின்றி உடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கிறது உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
Also read: கோவக்காய் இப்படி சமைத்துக் கொடுங்கள்.. கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.