பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்.. இதுல நிறைய ஆபத்து இருக்கு

பொதுவாகவே நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எந்த உணவுகளை எப்படி சாப்பிட வேண்டும் என்று ஒரு முறையை பின்பற்றி வந்தார்கள். அதை அவர்கள் வருங்கால தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.

சில உணவுகளை நாம் தனியாக சாப்பிடும்போது கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது நமக்கு ஆபத்தை கொடுக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பாலில் நமக்கு ஏராளமான சத்துகள் கிடைக்கிறது.

அந்தப் பாலில் செய்யப்படும் சாக்லேட், ஸ்வீட் போன்ற அனைத்தையும் நாம் விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதில் நமக்கு ஆரோக்கியம் கிடைத்தாலும் சில உணவுகளை நாம் அந்தப் பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.

அது நம் உடலில் தேவையற்ற சில கெடுதல்களை உண்டாக்கும். அப்படி பாலுடன் எந்த உணவுகளை சாப்பிட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

பொதுவாகவே வீடுகளில் பாலுடன் சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவது உடலில் செரிமான பிரச்சனையை உண்டு பண்ணும். இது வயிற்றில் நஞ்சாக மாறும் தன்மை கொண்டது. அதனால் பாலுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அதேபோன்று இறைச்சி உணவுகளில் நமக்கு அதிகப்படியான புரோட்டின் கிடைக்கிறது. சிலர் நான் வெஜ் உணவுகளை சாப்பிட்டு விட்டு கடைசியாக பாலில் செய்த ஐஸ்கிரீம், மில்க்ஷேக் போன்றவற்றை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்படி செய்வதால் செரிமான மண்டலத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படும்.

மேலும் பாலுடன் ஸ்ட்ராபெர்ரி பழத்தையும் எடுத்துக் கொள்வது தவறான செயல். ஸ்ட்ராபெர்ரியில் அளவுக்கு அதிகமான வெப்பத்தைக் கொடுக்கும் அமிலத் தன்மை இருக்கிறது. அதனுடன் சேர்த்து குளிர்ச்சியான பால் சாப்பிடும் போது அலர்ஜி, சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மீனில் நமக்கு எண்ணற்ற சத்துகள் கிடைத்தாலும் அதை சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் பால் குடிப்பது தவறான செயல். அப்படி குடிப்பதால் அது நம் உடலில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும். இதனால் ரத்த ஓட்ட பாதிப்பு, இதய கோளாறு, சரும பிரச்சனை போன்றவை ஏற்படும்.

அதனால் மேற்கண்ட இந்த உணவுகளை நாம் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும். இதன் மூலம் நம் உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும். இதில் இருக்கும் ஆபத்துகளை நாம் நம்முடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.